நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா; ஜனாதிபதி ஏற்கவில்லை: ‘த லீடர்’ பரபரப்புச் செய்தி: நடந்தது என்ன?

🕔 December 29, 2020

நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியதாகவும், ஆனால் அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் ‘த லீடர்’ ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் நோக்குடன் நீதியமைச்சர் இவ்வாறு செய்திருக்கலாம் என தான் நம்புவதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனாவால் மரணிப்பவர்களை தகனம் செய்வது குறித்த அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில், முஸ்லிம் சமூகத்தினுள் கடும் எதிர்ப்பு இருப்பதால் – அமைச்சரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக நீதி அமைச்சரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கூறியதாகவும் ‘த லீடர்’ தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் வகையில் அலி சப்றி தனது ராஜினாமா கடிதத்தை இன்று வழங்கவில்லை என, அமைச்சரின் ஊடக செயலாளர் நலின் சமரகோன் ‘த லீடர்’ செய்தித்தளத்துக்கு கூறியுள்ளார்.

‘நீதி அமைச்சர் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்தாரா?’ எனும் தலைப்பில் ‘த லீடர்’ வெளியிட்ட செய்திக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும், அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும், ஜனாதிபதி அதை ஏற்கவில்லை எனவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக’ த லீடர்’ மீண்டும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ‘த லீடர்’ செய்தித்தளத்திடம் தெரிவிக்கையில்; நீதி அமைச்சர் கலக்கமடைந்திருந்தார் என்றும், அரசியல் அரங்கிலிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிப்பதாக சில அமைச்சர்களுக்கு அறிவித்திருந்தார் எனவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்