பெருந்தொகை வாடகைக் கட்டடத்துக்கு, நீதி அமைச்சை இடமாற்றும் தீர்மானம் ரத்து

🕔 December 12, 2020

நீதி அமைச்சை பெரும் தொகை வாடகையில் உலக வர்த்தக மையக் கட்டடத்துக்கு மாற்றும் தீர்மானம் நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நீதி அமைச்சை தற்போது இருக்கின்ற கட்டிடத்திலேயே முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல கலந்துரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் நீதியமைச்சை தனியார் கட்டடம் ஒன்றுக்கு மாற்றுவதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சியினர் அண்மையில் கருத்து வெளியிட்டதை அடுத்து, நீதி அமைச்சு தொடர்பில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குமாக அதிகரிக்கப்பட்ட 14 நீதியரசர்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக அமைச்சை பயன்படுத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் முகாமைத்துவ சபையும், நீதிச்சேவை ஆணைக்குழுவும் யோசனை முன்வைத்திருந்ததாக நீதி அமைச்சு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, உச்ச நீதிமன்றத்தினதும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் ஒரு பகுதியை நீதி அமைச்சில் நிறுவுவதற்கும், நீதி அமைச்சை வேறொரு பொருத்தமான இடத்துக்கு மாற்றுவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டு வருட காலத்துக்கு மாதம் ஒன்றுக்கு 9.8 மில்லியன் ரூபாவை செலுத்தி, நீதி அமைச்சை கொழும்பு உலக வர்த்தக மையத்தில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேக்கமடைந்துள்ள பெருமளவான வழக்குகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள கட்டடத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து, பயனுள்ள சேவையை வழங்குவதற்கான நோக்கத்தை புரிந்து கொள்ளாத சிலர் , வேறு அர்த்தங்களை கற்பிக்க முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நீதி அமைச்சை தற்போது இருக்கின்ற கட்டிடத்திலேயே முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 13 தளங்களைக்கொண்ட கட்டடத்தை சோதனையிடுவதற்காக பொது சட்டத்தரணிகள் சங்கத்தின் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள சட்டத்தரணிகள், பாரிய செலவில் தனியார் கட்டடம் ஒன்றுக்கு நீதி அமைச்சு கொண்டு செல்வதற்கு பதிலாக, இந்த கட்டடத்தை பயன்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்பான செய்தி: நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்