கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள்

🕔 November 30, 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை நடத்தும் பொருட்டு, இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் சவப்பெட்டிகளை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்கள் சிலரின் குடும்பத்தவர்கள் இதனை நிராகரித்துள்ளனர்.

இதேவேளை முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக, அவர்களின் சமய நம்பிக்கைக்கு எதிரான முறையில், இறந்த உடல்கள் தகனம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நாட்டில் கொரோனாவினால் மரணமடைகின்றவர்களின் சடலங்களை – அரசு தகனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டாம் என்றும், அவற்றினை தமது சமய நம்பிக்கையின் பிரகாரம் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறும், அரசாங்கத்திடம் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கொரோனாவினால் மரணிப்போரை எரிக்கும் நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில்தான், கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் மரணமடைந்த மூன்று முஸ்லிம்களின் குடும்பத்தவர்கள், இறந்த தமது உறவினர்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதோடு, அதற்காக சவப்பெட்டிகளை வழங்கவோ, அதற்குரிய பணத்தைச் செலுத்தவோ முடியாது என கூறியுள்ளனர்.

மரணித்தவர்களின் குடும்பத்தவர்கள் சொல்வதென்ன

இதுதொடர்பாக மரணித்தவர்களில் ஒருவரது உறவினர் எம்.எஸ்.எம். அஷ்ரப் என்பவரை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது.

“எனது உறவினர் 26ஆம் திகதி வீட்டில் இருக்கும் போது மரணமடைந்தார். அவருக்கு வயது 76. அவரின் மரணம் தொடர்பில் போலீசாருக்கு நாம் அறிவித்துவிட்டு, பிரேதத்தை கொழும்பு பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். இறந்தவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அங்கு கூறினார்கள்.

பின்னர் மரணமடைந்த எமது உறவினருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று 28ஆம் திகதி அறிவித்தார்கள்.

இதனையடுத்து இறந்தவரின் பிரேதத்தை தகனம் செய்வதற்காக சவப்பெட்டியொன்றைப் பெற்றுத்தருமாறு வைத்தியசாலைத் தரப்பினர் எம்மிடம் கேட்டார்கள். நாம் அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டோம்.

எமது உறவினரின் உடலை அடக்கம் செய்வதற்கே நாம் விரும்புகிறோம். அதற்கு மாறாக, அந்த உடலை எரிப்பதற்குத் தேவையான பெட்டியை பெற்றுக் கொடுக்க நாம் விரும்பவில்லை. அதேவேளை, எமது உறவினரின் உடலை எரிப்பதற்கான சம்மதத்தைத் தெரிவிக்கும் வகையில், நாம் எவ்வித கையொப்பங்களையும் எந்தவொரு ஆணவத்திலும் இடவில்லை” என்று அஷ்ரப் கூறினார்.

இதன்பின்னர் கொழும்பில் மரணித்த இன்னொருவரின் மகன் றிஸ்வி என்பவரையும் பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. தனது தந்தையும் 26ஆம் திகதி வீட்டில் இருக்கும் போதே மரணித்ததாக அவர் கூறினார்.

“எனது தந்தைக்கு 83 வயது. நோயுற்ற நிலையில் கடந்த 03 மாதங்களாக படுக்கையில்தான் இருந்தார். 26ஆம் திகதி தந்தை உயிரிழந்தமையை அடுத்து, அதிகாரிகளுக்கு அறிவித்து விட்டு, அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய, பிரேதத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். அங்கு பிரேதம் மீது பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, எனது தந்தை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தார் எனக் கூறினார்கள்.

இந்த நிலையில்தான் பிரேதத்தை தகனம் செய்ய வேண்டும் என்றும் அதன்பொருட்டு சவப்பெட்டி ஒன்றை வாங்கித் தருமாறும் கேட்டார்கள். எனது தந்தையின் உடலை எரிப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என்பதால், பெட்டி வாங்கித் தர மாட்டோம் என்றோம். பெட்டியை அன்பளிப்பாக பெற்றுத் தருவதற்கு சிலர் உள்ளனர் என்றும், அவர்களில் ஒருவருடன் பேசுமாறும் கூறினார்கள். அதையும் நாங்கள் மறுத்து விட்டோம். முஸ்லிம்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களின் உடலை எரிப்பதற்கு நாம் இணங்கிப்போக முடியாது” என்றார், இறந்தவரின் மகன் அஸீஸ்.

சவப்பெட்டியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

இது இவ்வாறிருக்க, கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடலை எரிக்கும் பொருட்டு, அவர்களின் குடும்பத்தவர்களிடம் கொழும்பிலுள்ள ஐடிஎச் வைத்தியசாலையில் (தொற்று நோயியல் வைத்தியசாலையில்) 58 ஆயிரம் ரூபாய் பணம் கோரப்பட்டதாக கடந்த 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தகவல் வெளியிட்டதோடு, இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் விளக்கம் ஒன்றினையும் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், கொரோனாவினால் ஒருவர் மரணித்தால் அவரின் இறுதிக்கிரிகையை மேற்கொள்ளும் பொருட்டு, மரணித்தவரின் குடும்பத்தார் சவப்பெட்டியொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பெற்றுக்கொடுக்கத் தவறினால் அணுசரனையாளர்களிடமிருந்து சவப்பெட்டியை பெற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

முஸ்லிம்கள் பழிவாங்கப்படுகிறார்கள் – ஆசாத் சாலி

இதேவேளை, மேல் மாகாணத்துக்கான முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி – இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்; “முஸ்லிம்களை பழிவாங்குவதற்காகவே, அவர்களின் சமய நம்பிக்கைக்கு எதிரான முறையில், இறந்தவர்களின் உடல்களை அரசாங்கம் தகனம் செய்து வருகின்றது” என்றார்.

மேலும், நாட்டில் சுமார் 10 சதவீதமான முஸ்லிம்களே உள்ள நிலையில், கொரோனாவினால் மரணிப்போரில் அதிகமானோர் முஸ்லிம்கள் எனக் கூறப்படுவதிலும் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் ஆசாத் சாலி தெரிவித்தார்.

“கொரோனா நிதியத்திலிருந்து சவப்பெட்டிகளை கொள்வனவு செய்யுங்கள்”

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க; கொரோனா நிதியத்தில் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை 1640 மில்லியன் ரூபா ய்நிதி காணப்பட்ட போதிலும், கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக சவப்பெட்டியைக் கொள்வனவு செய்யும்பொருட்டு, அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் பெற்று வருவதாக குற்றம்சாட்டினார்.

கொரோனா நிதியத்திலுள்ள 1640 மில்லியன் ரூபாயில் 268 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, கொரோனா தொற்றுக் காரணமாக இறந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, கொரோனா நிதியத்திலுள்ள பணம் மூலம் சவப்பெட்டிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் இதன்போது அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

இலங்கையில், 29ஆம் திகதி பிற்பகல் வரையில் கொரோனாவினால் 109 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்