உலக பணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் ஈலோன் மஸ்க்

🕔 November 25, 2020

லக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு ஈலோன் மஸ்க் (Elon musk) முன்னேறி உள்ளார்.

அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதை அடுத்து, அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டொலர்களில் இருந்து 128 பில்லியன் டொலர்களாக (இலங்கை மதிப்பில் 23,695 பில்லியன் ரூபா) உயர்ந்துள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லினியர்கள் பட்டியல் தரும் தகவல்களின்படி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஈலோன் மஸ்க் உள்ளார்.

புதிய டெஸ்லா பங்குகள் அமெரிக்காவின் முக்கியமான பங்குப்பட்டியலான S&P 500 பட்டியலிடப்பட்டு இருப்பது, மின்சார வாகன பங்குகளை வாங்குவதில் ஓர் அலையை ஏற்படுத்தி உள்ளது

இதன் காரணமாக எலான் முஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

தங்களது போட்டியாளர்களான டொயோட்டா, ஜெனரல் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களை விடக் குறைவான வாகனங்களைத் தயாரித்தாலும், உலகின் மதிப்புமிக்க கார் நிறுவனமாக டெஸ்லா இருக்கிறது.

ஜெர்மனியில் செவ்வாய்க்கிழமை பேசிய மஸ்க், மிகப்பெரிய சந்தையான ஐரோப்பாவில் சிறிய கார்களுடன் டெஸ்லா நுழைவது மிகவும் அறிவுடைய செயலாக இருக்கும் என்றார்.

“அமெரிக்காவில் கார்கள் பெரிதாக இருக்க வேண்டும். அவர்களின் ரசனை அப்படி. ஐரோப்பிய மக்கள் சிறிய கார்களையே விரும்புவார்கள்” என்றார்.

பல ஆண்டுகளாக நட்டத்தை சந்தித்த இந்த நிறுவனம், இப்போது தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக லாபத்தை ஈட்டி வருகிறது. பெருந்தொற்று காலத்திலும், டெஸ்லாவின் கார் விற்பனை சிறப்பாக இருப்பதே இதற்குக் காரணம்.

கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 500 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்தான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2017ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்தார். அமேசான் நிறுவனர் ஜெஃப் அவரை அவ்வாண்டு பின்னுக்கு தள்ளினார்.

கேட்ஸின் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் அமரிக்க டாலர்கள். அவர் அறக்கட்டளைகளுக்குத் தானமளிக்காமல் இருந்திருந்தால் சொத்து மதிப்பு அதிகமாக இருந்திருக்கும்.

ஜெஃப்பின் சொத்து மதிப்பு 182 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது ப்ளூம்பெர்க்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆன்லைனில் பொருட்களை வாங்குவது அதிகரித்ததை அடுத்து அவரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்