காந்தியின் பொக்கெட் கடிகாரம்; 29 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகைக்கு விற்பனை

🕔 November 22, 2020

காந்தி ஒரு காலத்தில் பயன்படுத்திய, உடைந்த பொக்கெட் கடிகாரம் ஒன்று 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு (இலங்கை ரூபாயில் சுமார் 29. 5 லட்சம்) பிரிட்டனில் ஏலம் போய் இருக்கிறது.

காந்தியின் இந்தக் கடிகாரம் 10,000 பவுண்ட் ஸ்டெர்லிங் வரை விலை போகலாம் என மதிப்பிட்டு இருந்தார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஈஸ்ட் பிரிஸ்டல் ஒக்‌ஸன்ஸ் நிறுவனத்தின் ஏலத்தில், அந்தக் கடிகாரம் 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங் விலை போய் இருக்கிறது.

காந்தியால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்பட்ட மூக்குக் கண்ணாடி 2,60,000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு (இலங்கை பெறுமதியில் சுமார் 06 கோடி 39 லட்சத்து 63 ஆயிரம் ரூபா) கடந்த ஓகஸ்ட் மாதம், விலை போனது நினைவுகூரத்தக்கது.

இந்த மூக்குக் கண்ணாடியை ஏலம் விட்டபின், காந்தியோடு தொடர்புடைய பல பொருட்களுக்கு கோரிக்கைகள் அதிகம் வந்தன என்கிறார் ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்‌ஸன்ஸ் நிறுவனத்தின் ஆண்ட்ரூ ஸ்டோவ்.

“காசுகள், புகைப்படங்கள் என பல பொருட்கள் வேண்டும் என்று எங்களுக்குக் கோரிக்கைகள் வந்தன. அப்போதுதான் இந்த பொக்கெட் கடிகாரமும் ஏலம் விடப்பட வேண்டும் என்று கோரிக்கை வந்தது. நாங்கள் வியப்படைந்தோம்” என்கிறார் ஆண்ட்ரூ.

இந்த பொக்கெட் கடிகாரத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சேகரிப்பாளர் ஏலத்தில் எடுத்து இருப்பதாக, ஏலம் விட்ட ஆண்ட்ரூ ஸ்டோவ் சொல்கிறார்.

வெள்ளித் தகடுடைய , இந்த சுவிட்சர்லாந்து பொக்கெட் கடிகாரத்தை, மோகன்லால் சர்மா என்கிற மர தச்சருக்கு, 1944-ம் ஆண்டு காந்தி அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார்.

விளம்பரம்

1936-ம் ஆண்டு, காந்தியயைச் சந்திக்க மோகன்லால் பயணம் செய்து இருக்கிறார். அவரோடு தொண்டுப் பணியும் செய்து இருக்கிறார்.

மோகன்லால் சர்மாவின் அன்புக்கு பரிசாக, காந்தி இந்த பொக்கெட் கடிகாரத்தை, 1944-ம் ஆண்டு கொடுத்து இருக்கிறார்.

1975-ம் ஆண்டு, மோகன்லால் சர்மாவின் பேரன் கைக்கு இந்த கடிகாரம் வந்து இருக்கிறது.

இது ஓர் அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க பொருள். இதை காந்தி, பல ஆண்டுகள் பயன்படுத்தி இருக்கிறார், அதன் பின் தன் நம்பிக்கையான நண்பர் ஒருவருக்கு கொடுத்து இருக்கிறார், அவரும் இந்த கடிகாரத்தை பாதுகாத்து வைத்திருக்கிறார். இது அற்புதமானது என்கிறார் ஆண்ட்ரூ ஸ்டோவ்.

Comments