பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு

🕔 October 29, 2020

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் பெண்கள் இருவர் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் பிடித்தபோது, ‘அல்லாஹு அக்பர்’ என தொடர்ச்சியாக அவர் சத்தமிட்டதாக நைஸ் நகர மேயர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணின் குரல்வளை அறுக்கப்பட்டது. உயிரிழந்தவர்களில் ஒருவர் – அந்த தேவாலயத்தின் பராமரிப்பாளராவார்.

தாக்குதல் நடந்தபோது, பிரார்த்தனைக்காக வந்த பலரும் தேவாலய வளாகத்துக்குள்ளேயே இருந்துள்ளனர். அப்போது தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர், தேவாலய வளாகத்தில் இருந்த அபாய ஒலியை எழுப்பி எச்சரிக்கை செய்தார்.

நடந்த சம்பவம், இஸ்லாமிய பயங்கரவாதத்தை நோக்கியே இருப்பதாக நகர மேயர் எஸ்ட்ரோஸி கூறியுள்ளார். தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் அந்த பகுதிக்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் சென்று பார்வையிட்டார்.

இதேவேளை, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் முன்பாக நைஸ் நகர தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் பேசிய பிரதமர், நாட்டை உலுக்கும் இந்த கடுமையான புதிய சவாலை அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நைஸ் நகர தாக்குதல் சம்பவத்தை முஸ்லிம் மத நம்பிக்கைக்கான பிரெஞ்சு கவுன்சில் கண்டித்துள்ளது.

பிரான்ஸில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிகக்கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக நைஸ் நகர தேவாலய வளாக தாக்குதல் சம்பவம் கருதப்படுகிறது.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி பிரான்ஸ் தேசிய தினத்தின்போது 31 வயதான துனீசியாவைச் சேர்ந்த நபர் கொண்டாட்டத்துக்காக குழுமியிருந்த கூட்டத்தினர் மீது டிரக்கை ஏற்றினார். அந்த சம்பவத்தில் 86 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் சில நாட்களில் பாதிரியார் ஜாக்குவெஸ் ஹேமல், காலை திருப்பலியின்போது கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

வடமேற்கு பாரிஸில் உள்ள பள்ளி அருகே ஒக்டோபர் மாத தொடக்கத்தில் சாமுவேல் பாத்தி என்ற ஆசிரியை தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். பள்ளி மாணவர்களிடம் முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பித்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்