தமிழைக் குதறும் வசந்தம் செய்தி: தமிழ் பிரிவுக்கு சிங்களவர் நியமனம்: அமைச்சரே கொஞ்சம் கவனியுங்கள்

🕔 September 24, 2020

– அஹமட் –

ரசுக்குச் சொந்தமான ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தி அறிக்கையிலும், வசந்தம் செய்திப் பிரிவு வழங்கும் ‘சுயாதீன செய்திப் பார்வை’ நிகழ்ச்சியிலும் – அண்மைக்காலமாக தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்படுவதைக் காண முடிகிறது.

இவ்வாறு தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள், செய்தி வாசிப்பின் போதும், சுயாதீன செய்திப் பார்வை நிகழ்ச்சியிலும் தமிழைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கின்றனர் என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ‘சுயாதீன செய்திப் பார்வை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கிறிஷ்டீனா எனும் பெண்மணி – தமிழை மிக மோசமாகக் கடித்துக் குதறுகின்றமை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

மழை என்பதை மலை என்றும், வெள்ளம் என்பதை வெல்லம் என்றும், சூழவுள்ள என்பதை சூலவுள்ள என்றும், மாகாணம் என்பதை மாகானம் எனவும், புள்ளி என்பதை புல்லி என்றும் – ஏராளமான உச்சரிப்புத் தவறுகளை அவர் தொடர்ந்தும் விட்டுக் கொண்டிருக்கின்றார்.

குறித்த பெண்ணுக்கு ழகர, ணகர போன்ற ஒலி உச்சரிப்புகள் சுட்டுப் போட்டாலும் வராது என்பதை, அவரைத் தொடர்ந்து கவனிப்போர் புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும், தமிழை சரியாக உச்சரிக்கத் தெரியாத இவ்வாறான நபர்களுக்கு, அரச தொலைக்காட்சியொன்றில் நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதற்கு ஏன் தொடர்ச்சியாகச் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.

தமிழைக் குதறும் இவ்வாறான நபர்களுக்கு அரச தொலைக்காட்சியொன்றிலேயே தொடர்ச்சியாக சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றமை குறித்து, பலரும் தமது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை இப்படி தமிழைக் குதறுகின்றமை குறித்து கவனிக்க, வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் – யாரும் இல்லையா என்று பலரும் கேட்கின்றனர்.

இது குறித்து விசாரித்துப் பார்த்தபோது, வசந்தம் தொலைக்காட்சியின் தமிழ் செய்திப் பிரிவுக்கு பொறுப்பாக சிங்களவர் ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளமையை அறிந்து கொள்ள முடிந்தது.

சிங்களவர் ஒருவரை தமிழ் செய்திப் பிரிவுக்கு நியமித்துள்ளமையினால் வந்த வினைதான் இது என்று அங்குள்ளோர் தெரிவிக்கின்றனர்.

ஊடக அமைச்சரே, தயவு செய்து இந்த தமிழ் கொலை குறித்து கொஞ்சம் கவனியுங்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்