ஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன?

🕔 September 23, 2020

– டொக்டர் சிவச்சந்ரன் சிவஞானம் –

டிகர் விஜய்க்கு டொக்டர் பட்டம் கொடுத்தது ஒரு பல்கலைக்கழகம். அதே பல்கலைக்கழகம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் கொடுத்தது. அந்தப் பல்கலைக்கழக வேந்தர் எடப்பாடியின் கட்சியான அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டார்.

நடிகர் விஜயகாந்துக்கு அமெரிக்காவின் ஒரு திருச்சபை இறையியலுக்காக டொக்டர் பட்டம் கொடுத்தது. அந்த திருச்சபையின் இணையத்தளத்திற்குப் போய் அந்த பட்டம் பெற தேவையான அடிப்படைத் தகுதிகளைப் பார்த்தால் விஜயகாந் அதை நெருங்கக்கூட முடியாதே? அப்புறம் எப்படி கிடைத்தது? ஜெயலலிதா, கருணாநிதி என எல்லோரும் டொக்டர் பட்டம் பெற்றவர்கள்.

சரி இவர்கள் எல்லோரும் அவர்களின் துறையில் ஏதோ சாதித்தவர்கள் தானே, அதற்காக கெளரவ பட்டங்களாக இருந்திட்டுப் போகட்டும் என நினைக்கலாம்.

ஆனால் இந்த வியாதி இப்போது இலங்கையில் ஊடுருவி உள்ளது. இந்தச் சாதனையைத் தொடங்கி வைத்தவர்கள் தமிழர்கள்தான். இரண்டாயிரம் ஆண்டின் ஆரம்பம், வெள்ளவத்தையில் ஒரு சிறிய அறையினுள் ஒரு பல்கலைக்கழகம் இயங்கியது. அவர்களின் தொழில், விரிவுரைகள் எடுப்பதில்லை. புலம் பெயர் தேசத்தில் இருப்பவர்களை அழைத்து பணம் பெற்று கலாநிதிப்பட்டம் கொடுப்பதே அவர்களின் வேலை .

கனடாவில் இருந்தே நிறையப்பேர் இந்த கலாநிதிப் பட்டங்களை பெற்றுள்ளார்கள். இலங்கையில் 300 – 500 டொலர் வரை செலுத்தி பட்டம் பெற்று, கனடாவிலே பல ஆயிரம் டொலர்கள் செலவழித்து தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி உள்ளார்கள் பலர்.

இது 2004- 2005 காலப்பகுதியில் மிகப்பிரபலமான வியாபாரமாக இருந்தது.

அதன்பின் தமிழர்களை இலகுவாக புகழுக்கு மயக்கிவிடலாம் என்று புரிந்து பல அமைப்புகள் இலங்கைத் தமிழர்களை குறிவைத்தது. Global peace university என்ற பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ளதாக அதன் இணையத்தளம் சொல்கிறது. ஆனால் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் அப்படியொரு பல்கலைக்கழகமே இல்லை என்ற ஆச்சரியமான உண்மை வெளிவந்தது.

அந்தப் பல்கலைக்கழகம் பல நாடுகளில் கலாநிதிப் பட்டங்களையும் பல விருதுகளையும் வழங்கி வருகிறது. அது ‘டார்கெட்’ பண்ணுவது ஆபிரிக்க நாடுகளும், ஆசிய நாடுகளுமே. பல ஆபிரிக்க பிரபலங்கள் அந்தப் பல்கலைக்கழகம் தங்களை ஆசைகாட்டி பணம் கேட்டதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதே பல்கலைக்கழகம் சில வருடங்களுக்கு முன்பு சாவகச்சேரியில் ஒரு பட்டமளிப்பு விழாவை நடத்தி பலருக்கு விருதும் கலாநிதிப் பட்டமும் கொடுத்தது. பல முறை கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மண்டபத்திலும் பட்டமளிப்புகளைச் செய்துள்ளது. அதிலே எனக்குத் தெரிந்த சாதாரண அரச வேலை செய்யும் தம்பிக்கும் ‘தேசகீர்த்தி’ என்ற விருது கிடைத்தது.

அவனிடம் கேட்ட போது – தான் பணம் கொடுக்கவில்லை ஆனால் ஒரு விருதுக்கு மற்றவர்களிடம் 50000 ஆயிரம் ரூபாய் தொடக்கம் ஒரு லட்சம் ரூபா வரை விருதுக்காகவும், மேலதிகமாக விழா செலவுக்கான தொகையும் பெறப்பட்டதாக உண்மையைச் சொன்னான். அவனுக்கு மட்டும் ஏன் பணம் பெறாமல் விருது கொடுத்தார்கள்? இதற்கான பதிலைத் தேடியபோதுதான் இந்த அமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்ற உண்மைகள் புரிந்தன.

இவை முகவர்கள் ஊடாக சமூகத்தில் இருக்கும் கொஞ்சம் அறியப்படடவர்களை அணுகும். சில அமைப்புக்கள் இணையம் ஊடாக விண்ணப்பமும் கோரும். இவர்கள் அணுகும் சிலருக்கு இலவசமாகவே விருதுகளும் பட்டங்களும் கொடுக்கப்படும். ஆனால் பெரும்பாலானோரிடம் குறிப்பிட்ட தொகை பட்டத்துக்காக அல்லது விருதுக்காக பெறப்படும்.

ஊடக துறை சார்ந்தோர், அரசியல்வாதிகளோடு தொடர்புள்ளவர்களுக்கு இலவசமாக வழங்குவதன் மூலம் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளுகின்றன இந்த அமைப்புகள்.

அந்த தம்பியின் அரசியல் தொடர்புக்காகவே அவனுக்கு அந்த விருது இலவசமாக கிடைத்தது.

இப்படியான ஒரு விருது பெற்ற ஒரு துறையைச் சேர்ந்த தம்பி – எனக்கு சில உண்மைகளை ‘வொயிஸ் மெசேஜாக’ அனுப்பியிருந்தான். தான் சாதித்ததை இணையத்தளம் ஊடாக கூறி விண்ணப்பத்தை அனுப்பியுள்ளான். அவனுக்கு இலவசமாக ஒரு விருது – ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு இருகட்டமாக நடந்துள்ளது.

விருதுக்குரியவர்கள் – முதற்கட்டமாக அழைக்கப்பட்டு விருது கொடுக்கப்பட்டு அனுப்பட்ட பின்னர், இரண்டாம் கட்டமாக கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிலே என்ன நடந்தது என தனக்குத் தெரியாது எனவும் ஆனால், அதிலே பட்டம் பெற்றவர்களிடம் ஒரு லட்சம் முதல் 03 லட்சம் ரூபா வரை பெறப்பட்டதாக அறிந்ததாகவும் சொன்னான்.

இதுதான் வியாபார தந்திரம். ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் நிகழ்வு. அதற்கான செலவை விருது, பட்டம் பெற்றவர்களிடமே அறவிட்டு விடுவார்கள். மேலதிகமாக பட்டங்களுக்கென பெறப்படும் பணம் மொத்தமாக மில்லியன் கணக்கில் சேரும். அது இந்த அமைப்பை நடத்துபவர்களுக்கான லாபம்.

ஒரு இணையத்தளத்தை நடத்துவதைத் தவிர வேறு எந்தச் செலவும் இல்லை. ஆனால் மில்லியன் கணக்கில் லாபம். நல்ல தொழில்தானே? இதற்கான அவர்களின் முதலீடு, ‘எதுவும் செய்யாமல் பட்டமும் புகழும் பெறவேண்டும் என நினைப்பவர்களின் ஆசை’ ஆக உள்ளது.

இப்போது இது மற்ற சமூகத்திடமும் பரவியுள்ளது. அண்மையில் உலகத் தமிழ் பல்கலைக் கழகம் பலருக்கு கலாநிதிப் பட்டங்களைக் கொடுத்துள்ளது. ஒருவர் வியாபார முகாமைத்துவத்திலும், இன்னொருவர் தமிழ் பாடத்திலும் கலாநிதிப்பட்டங்களைப் பெற்றதாக பகிர்ந்து நுற்றுக்கணக்கானோரிடம் வாழ்த்துக்களை பெறுகிறார்கள்.

அந்தப் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தை பார்த்தால் கற்கை நெறிகள் பற்றி எந்த விபரமும் இல்லை. கலாநிதி கற்கை நெறிக்கான விண்ணப்பப்படிவம் கூட இல்லை. ஆனால் கலாநிதிப் பட்டம் பெறுவதற்கான விண்ணப்படிவம் மட்டுமே உள்ளது. இதென்ன பித்தலாட்டம் என நினைத்துக்கொண்டே அந்த பல்கலைக்கழக இணைய பதிவு பற்றிய விபரங்களை ஆராய்ந்தால், அது தொடங்கி இன்னும் ஒருவருடம் கூட பூர்த்தியாகவில்லை.

தொடங்கி ஒருவருடம் கூட பூர்த்தி ஆகாத பல்கலைக்கழகம் எப்படி பட்ட மேற்படிப்புப் பட்டமளிப்பை நடத்தலாம்?

இன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு பட்டமளிப்பு விழா நடக்க உள்ளதாம். சட்ட ரீதியாக அணுகி இந்த விடயத்தை தடுப்பது சாத்தியமில்லை.

ஆனால் இப்படிப்பட்டம் பெறுவது ஏமாற்று வேலை என எல்லோரிடமும் கொண்டு சேர்த்தால், இப்படிப் பட்டம் பெற்றவர்கள் வெளியில் சொல்ல வெட்கப்பட வேண்டிய நிலையை உருவாக்கலாம். அதன் மூலம் இந்த போலி பல்கலைக்கழங்களுக்கான வியாபாரத்தைத் தடுத்து நிறுத்தலாம்.

இந்தப்பதிவை #stopfakedegree என்ற ஹாஷ்டக் உடன் பகிருங்கள். இப்படிப் பட்டம் பெற்று சமூகத்தை ஏமாற்றியவர்கள் கூனிக்குறுக வேண்டும். அந்தப் பயத்திலேயே இனி எவரும் இது பற்றி சிந்திக்கக் கூடாது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்