சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பதவி நீக்கம்: அங்கு நடப்பது என்ன?

🕔 September 1, 2020

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்பட அந்நாட்டின் முக்கிய பதவிகளை வகித்து வந்த பலர், அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எமனில் சண்டையிட்டு வரும் சௌதி தலைமையிலான கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த இளவரசர் ஃபகாத் பின் துர்க்கி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஆளுநராக இருந்த மேற்படி தளபதியின் மகன் அப்துல் அசீஸ் பின் ஃபகாத்தும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சௌதி பாதுகாப்பு அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்துக்கிடமான நிதிப் பரிவர்த்தனை தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டுவரும் நான்கு அதிகாரிகளுடன் மேற்படி இருவரும் விசாரணையை எதிர்கொண்டு உள்ளதாக சௌதி மன்னரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி மன்னராக சல்மான் இருந்தாலும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானே சௌதி அரேபியாவின் உண்மையான ஆட்சியாளராகக் கருதப்படுகிறார்.

சௌதி அரேபிய அரசில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக அவர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனினும் இளவரசர் அரச அதிகாரத்தில் தனது பிடியை இறுக்கிக் கொள்வதற்காகவே உயர்மட்ட அளவிலான கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

சௌதி மன்னரின் இளைய சகோதரர் இளவரசர் அகமது பின் அப்துல் அசீஸ் மற்றும் முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீஃப் உள்ளிட்ட அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்தி வெளியிட்டது.

2017ஆம் ஆண்டு சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சில அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பின்னர், அவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் அதற்கு முன்பு சௌதி அரசுக்கு அவர்கள் 106.7 பில்லியன் அமெரிக்க டாலர் பிணைத் தொகையை வழங்கினர்.

சௌதிக்கு 2016ஆம் ஆண்டு பட்டத்து இளவரசரான பின்பு, தாம் மேற்கொண்டு வரும் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலம் 35 வயதாகும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றார்.

எனினும், அவர் மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

2018இல் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் இருக்கும் சௌதி துணைத் தூதரகத்தில் சௌதி அரேபியாவில் இருந்து வெளியேறி வாழ்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டமை, கனடாவில் வசித்து வரும் சௌதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொல்ல திட்டமிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு ஆகியவையும் அவற்றில் அடக்கம்.

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக எமன் அரசு, சௌதி அரேபியாவின் ஆதரவுடன் போரிட்டு வருகிறது.

எமனில் போர் தொடர்வதற்கு இவரும் ஒரு காரணம் என்ற விமர்சனமும் உள்ளது.

பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி வழங்கியமை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாகவும் முகமது பின் சல்மான் மீது குற்றச்சாட்டு உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்