தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்

🕔 July 28, 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பேராசிரியர் பதவியினைப் பெறுவது இதுவே முதற்தடவையாகும்.

இதற்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த எந்தவொரு விரிவுரையாளரும் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலைத்துறையினைச் சேர்ந்த இலங்கை முஸ்லிம் கல்விமான்கள் எவரும் இத்தகைய கல்விசார் உயர் பதவியினைப் பெற்றிராத ஒரு சூழ்நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் இவ்வுயர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

அவ்விருவருள் ஒருவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் கீழ் இயங்கும் மொழித்துறையினைச் சேர்ந்தவரும், அத்துறையின் முன்னாள் தலைவருமாகிய பேராசிரியர் றமீஸ் அப்துல்லா ஆவார். இந்நியமனத்துக்கு முன்னரே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருந்த றமீஸ் அப்துல்லா, நாடறிந்த கல்விமானும், பேச்சாளரும், இலக்கியச் செயற்பாட்டாளருமாவார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப ஆசிரியர்களுள் ஒருவராக விளங்கும் இவர், இன்று முதல் தமிழ்த்துறை தலைமைப் பேராசிரியராக (Chair Professor) நியமனம் பெற்றுள்ளமை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.

விசேடமாக, இலங்கை வரலாற்றில் தமிழ்த்துறை முஸ்லிம் கல்விமானொருவர் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படுவதும் இதுவே முதற்தடவையாகும்.      

மற்றையவர் புவியியல் துறையின் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல் ஆவார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராக விளங்கும் பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், கலை கலாசார பீடத்தின் முன்னாள் பீடாதி மற்றும் புவியியல் துறையின் தலைவர் ஆகிய முக்கிய பொறுப்புக்களை வகித்தவராவார்.

புவியியல் துறையின் உதவிப் பேராசிரியராக விளங்கிய இவர், இன்று முதல் அத்துறையின் தலைமைப் பேராசிரியராக (Chair Professor)  நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் புவியியல்துறை முஸ்லிம் கல்விமானொருவர் தலைமைப் பேராசிரியராக நியமிக்கப்படுவதும் இதுவே முதற்தடவையாகும்.

Comments