கருணா அம்மான் விவகாரம், அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடாகும்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

🕔 June 24, 2020

மைச்சர் விமல் வீரவங்ச மற்றும் உதயகம்பன்பில உள்ளிட்ட இனவாதத்தை மூலதனமாகக்கொண்டு அரசியல் நடத்துபவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே கருணா அம்மான் கருத்து வெளியிட்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் குற்றசம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கருணா அம்மானுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் தொடர்பில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார். இது ஒரு ஏமாற்று பேச்சாகும்.

கருணா அம்மான் கடந்த காலங்களிலே யாருடன் இணைந்து செயற்பட்டார் என்பது முழு நாடும் அறிந்ததே. கருணாவுக்கு ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சர் பதிவிகூட வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு அழைப்பு விடுத்ததாகவும், இரு முறை தேசியப்பட்டியலில் சந்தர்ப்பம் கொடுத்தமையினால், இம்முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருவதாக மஹிந்தவுக்கு அறிவித்ததாகவும் கருணாவே கூறியுள்ளார்.

இவ்வாறான ஒரு நிலையில் பொதுஜன பெரமுனவுக்கும், கருணாவுக்கும் இடையில் தொடர்பில்லை என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது. ஆளும் தரப்பிலிருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பேரினவாதிகள் தெற்கில் சிங்கள மக்கள் முன்னிலையில் எவ்வாறு இனவாத அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்களோ? அதனைப் போன்றுதான் கருணாவும் கிழக்கில் தமிழ் மக்கள் முன்னிலையில் இந்த இனவாத அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.

இதுவும் அரசாங்கத்தின் அரசியல் லாபம் கருதிய ஒரு நோக்கமாக இருக்கலாம்.

கிழக்கில் கருணாவை பயன்படுத்தி வாக்குகளை அதிகரிப்பதுடன், கருணாவின் கருத்தை காரணங்காட்டி தெற்கிலும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான  திட்டமாகவும் இது இருக்கலாம்.

இவர்கள் மூவருமே ஓர் அணியிலேயே செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு நாணயத்தின் இருப்பக்கங்கள் போன்றே இவர்களது செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளன.

இந்த இனவாதத்தை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் எதிர்வரும் காலங்களில் நாம்  பாரிய அழிவுகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். இதனை புரிந்துக் கொண்டவர்கள் அதற்கு எதிராக செயற்பட்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டு மக்களிடையே உள்ள ஒற்றுமை மற்றும் சமத்துவத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதேவேளை நீதியான ஆட்சியை முன்னெடுப்பதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அவ்வாறு செயற்படுவதாக தோன்றவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் இடைவெளி பேணுதல் போன்ற சட்ட விதிகளுக்கமையவே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆனால் ஆளும் தரப்பினர் இவற்றை பின்பற்றுவதாக தெரியவில்லை.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள காலகட்டங்களிலே இடமாற்றம் வழங்குதல் மற்றும் பதவிவுயர்வு வழங்குதல் என்பன தேர்தல் சட்டவிதிகளுக்கு புறம்பான செயற்பாடுகளாகும். அரசாங்கம் அதனை பொருட் படுத்தாமல் அரச ஊழியர்களுக்கு இடமாற்றம் மற்றும் பதவிவுயர்வு ஆகியவற்றை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்தினவுக்கும் அண்மையில் பதிவிவுயர்வு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த அரசாங்கத்தால் அரச ஊழியர்களுக்காக வழங்கிவைக்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்கள் அனைத்தையும் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாடு இன்று பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறாதொரு நிலையில் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை திருத்தி அமைப்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.

அதற்கமைய பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இவ்வாறு பொறுப்பின்றி  செயற்படுபவர்கள், பொதுத் தேர்தலை வெற்றி கொண்டால். ஏகாதிபத்திய வாதத்திலான அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுக்க சாத்தியம் இருக்கின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்