ஒரே இரவில் 2000 படையினரைக் கொன்றதாக கருணா கூறியமை பாரதூரமானது; விசாரணை நடத்த வேண்டும்: நவீன் திஸாநாயக்க

🕔 June 20, 2020

– க. கிஷாந்தன்

“ஆணையிறவில் 24 மணிநேரத்துக்குள் 02 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும்” என ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று சனிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக்கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

நவீன் திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு;

“கருணா என்ற புலி உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. 1977ஆம் ஆண்டு முதல் ஆணையிறவை ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் பாதுகாத்தது. 2000 ஆம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சியின் போதே ஆணையிறவு வீழ்ந்தது. இவ்வாறு ஆணையிறவு வீழ்ந்தபோது ஒரே நாளில் 02 ஆயிரம் படையினரை கொன்றதாக கருணா அம்மான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமக்கு கூட தெரியாது. அப்படியானால் இந்த நாட்டில் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. 2000 பேரை எப்படி 24 மணிநேரத்துக்குள் கொல்வது? அப்படியெனில் அங்கு அப்பட்டமாக மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்க வேண்டும்.

2000 பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை தற்போதுதான் அறிகின்றேன். உண்மையிலேயே என்ன நடந்துள்ளது, நாட்டுக்கு தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளனவா அல்லது சூழ்ச்சியா?

ராணுவத்தில் இருந்த ஒருவரே ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். அவருக்கு ராணுவத்தின் மீது பற்று உள்ளது.

எனவே, இவை தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு  ஐக்கிய தேசியக்கட்சி கேட்டுக்கொள்கின்றது. கருணா அம்மானிடமும் விசாரணை நடத்தப்பட்டு, என்ன நடந்தது என்பது அறியப்படவேண்டும்” என்றார்.

இதன்போது பெருந்தோட்டத் துறை தொடர்பாகவும் நவீன் பல்வேறு விடயங்களைக் கூறினார்.

பெருந்தோட்டத் தொழில் தொடர்பில் தகவல்

“நான் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரானவன் அல்ல. 750 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையொன்றை பெற்றுக்கொடுப்பதற்கே முயற்சித்தேன். கொடுப்பனவுகள்மூலம் ஆயிரம் ரூபாவை பெறுவதற்கான சூழ்நிலை அன்று இருந்தது. ஆனால், அந்த தொகையை அடைவதற்கான வழிமுறையை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்தது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நான் அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற பின்னர், அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

திகாம்பரம் தரப்பினர் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இல்லை. எனவே, வெளியில் இருந்துக்கொண்டு அவர்கள் எப்படியான கருத்துகளையும் வெளியிடமுடியும். வெளியில் இருந்து இவ்வாறு சேறுபூசலாம். ஆனால், உள்ளே இருந்து தக்க வைத்துக் கொள்வதுதான் கடினம்.

2016 ஆம் ஆண்டு தீபாவளி கொடுப்பனவை வழங்குமாறு கோரினார் திகாம்பரம். நான் 350 மில்லியன் ரூபாவை வழங்கினேன். இன்று அதனை மறந்துவிட்டனர்.

50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக தேயிலை சபை ஊடாக 600 மில்லியன் ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்தேன். அதற்குள் சூழ்ச்சி செய்து மைத்திரிபால சிறிசேன ஆட்சியை கவிழ்த்துவிட்டார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்