கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு

🕔 June 14, 2020

ஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால், மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக, லங்கா தீப வார இறுதிப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்களின் படி ஐக்கிய மக்கள் சக்தியினாலும் கூட மாற்றுக் கருத்தினை முன்வைக்க இயலாத நிலை எனக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது.

உதாரணமாக 2000ஆம் ஆண்டில் சிறு பிள்ளைகளைப் படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு அளித்தார்.

இதனால் படையினர் அனைவருக்குமே களங்கம் ஏற்பட்டது. ஆனால் எமது ஆட்களுக்கு அது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டினை எடுக்கக் கூடியளவுக்கு முதுகெலும்பு இல்லாமல் போனது.

அதேபோன்று கொரோனா தொற்றுள்ள முஸ்லிம் நபர் ஒருவர் இறந்தால், அவரைப் புதைப்பதா தகனம் செய்வதா என்ற விடயத்திலும் ஓர் நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை.

எவ்வளவோ திறமைசாலிகள் இருந்தாலும் சஜித் பிரேமதாச மீது நான் தனிப்பட்ட ரீதியில் அன்பு வைத்திருக்கின்றேன். அவர் ஒரு
திறமைசாலி. ஆனால் ஐக்கிய மக்கள் சக்திக்கு மாற்று என்ற ஒன்று இல்லை.

மொட்டுக் கட்சியின் கருத்துக்களே பெரும்பாலானோருக்கு இருந்தது. மொட்டுக் கட்சியின் டுப்ளிகேட்டாக (நகலாக) இருக்க முடியுமே தவிர மாற்றாக இருக்க முடியாது.

தேர்தலில் இருந்து விலக எடுத்தமுடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல. கொரோனா காலப் பகுதியில் வீட்டில் இருந்தவேளை அக்காலப் பகுதியில் நாட்டின் நிலவரங்களை அவதானித்து மிகவும் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு இது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர் அரசியல் மீது விரக்திநிலையே ஏற்பட்டது. ஆனால் குறுகிய காலப் பகுதியில்
ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கம் தமது இயலாமையை
வெளிக்காட்டிக் கொண்டு, அழிவை நோக்கி செல்லும் பயணத்தை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அந்நேரத்தில் அரசியலில் இருந்து விலக சரியான தருணம் இதுவல்ல என்று நான் நினைத்தேன். சுமார் ஒரு மாதகால வெளிநாட்டு பயணத்தின் பின்னர், கடந்த ஜனவரி மாதம் நாடு
திரும்பினேன். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட பிளவு தொடர்பில் முன்னின்று செயற்பட தொடங்கினேன்.

நான், மலிக் சமரவிக்கிரம, கபிர் ஹாஷிம் போன்ற சிலர் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள பல தரப்புக்களையும் ஒன்றுப்படுத்தி வைத்திருக்க சூத்திரம் ஒன்றை
முன்வைத்தோம்.

ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவராக இருக்கும் அதேவேளை,
சஜித் பிரேமதாசவுக்கு புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தினை வழங்கி அந்த கூட்டணியின் பிரதம வேட்பாளராக அவரை
நியமிக்கவேண்டும் என்பதே அந்த சூத்திரமாகும். அந்த யோசனையை நான்தான் செயற்குழுவுக்கும் முன்வைத்திருந்தேன்.

மற்றவர்களும் அந்த யோசனையை ஏகமனதாக அங்கீகரித்திருந்தனர். இவ்வாறு தான் ஐக்கிய மக்கள் சக்தி உருவானது.

ஆனால் நான் உட்பட மற்றவர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியை தனி ஒரு அரசியற் கட்சியாக உருவாக்க நினைவிக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாகக் கொண்ட கூட்டணியைதான் நாம் பிரேரித்திருந்தோம். தாய்க் கட்சியின்
கீழ் இயங்கும் கூட்டணி ஒன்றைத்தான் நாம் திட்டமிட்டோம். ஆனால் துரதிருஷ்டவசமாக இறுதிநேரத்தில் சின்னம் தொடர்பாக ஏற்பட்ட நிலைமை காரணமாக நாம் என்றும் நினைத்துப் பார்க்காத வகையில் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுவிட்டது” என்றார்.

நன்றி: தமிழன்

தொடரபான செய்தி: நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்