சிங்கங்களை இழக்கும் காடுகள்

🕔 June 2, 2020

– முகம்மது தம்பி மரைக்கார் –

மைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், அவர் – மலையகத் தமிழ் மக்களின் ‘தலைவனாக’ இருந்தார் என்பதை மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில் அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் இறந்து போனமை இரட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆறுமுகனின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் நினைவுக்கு வந்தது. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில்தான், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப், அதே வருடம் செப்டம்பர் 16ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.

ஆறுமுகன் இறக்கும் போது அவருக்கு வயது 55. அஷ்ரப் மரணித்தபோது அவருக்கு 52 வயது. இருவரின் மரணமும் அகாலமானவை. நடுத்தர வயதில் இருவரும் மறைந்து போனார்கள்.

அஷ்ரப்பும் ஆறுமுகனும் எங்கு ‘முளை’த்தார்களோ, அந்த மண்ணின் மக்கள்தான் அவர்கள் இருவரையும் தத்தமது அரசியல் தலைவர்களாக்கிக் கொண்டனர். அஷ்ரப்பும், ஆறுமுகனும் வேறொரு நிலத்தின் ‘வாடகைத் தலைவர்’களாக இருக்கவில்லை என்பதுதான் அவர்களின் பெருமிதங்களாகும்.

2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான – மக்கள் முன்னணியுடன் கூட்டிணைந்து அம்பாறை மாவட்டத்தில் கதிரைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. எம்.எச்.எம். அஷ்ரப், ஏ.எல்.எம். அதாஉல்லா (தற்போதைய தேசிய காங்கிரஸ் தலைவர்) யூ.எல்.எம். முகைதீன் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர்.

ஆனால், தேர்தல் நடைபெறுவதற்கு முன்னராகவே அஷ்ரப் மரணித்து விட்டதால், அவரின் இடத்துக்கு அவருடைய மனைவி பேரியலை வேட்பாளராக முஸ்லிம் காங்கிரஸ் நியமித்தது. அந்தத் தேர்தலில் அஷ்ரப்பின் மனைவி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

கிட்டத்தட்ட அதேபோன்ற நிகழ்வுகள்தான் ஆறுமுகன் தொண்டமானின் மரணத்திலும் நடந்துள்ளன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணியமைத்துப் போட்டியிடுகிறது. அதற்கிணங்க நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஆறுமுகன் களமிறங்கியிருந்தார். அவரின் திடீர் மரணத்தையடுத்து, அன்னாரின் வேட்பாளர் இடத்துக்கு அவருடைய மகன் ஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஷ்ரப்பின் மரணத்தின் பிறகுதான் அவருடைய பெறுமானத்தை அவரின் மண்ணின் மக்கள் முழுவதுமாக உணர்ந்தனர். அஷ்ரப் என்கிற அரசியல் தலைவரின் இழப்பை, முஸ்லிம்கள் இன்னும் வலியுடன் நினைவுகூருகின்றனர். அஷ்ரப்பின் ‘இல்லாமை’, அவரின் மண்ணுக்கு வாடகைத் தலைவர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. ஆறுமுகனின் இழப்பால் – மலையகத்துக்கு அவ்வாறானதொரு நிலை நேர்ந்து விடக்கூடாது.

ஒரு நிலத்தின் மக்களுக்காகப் போராடுவதற்கும், தலைமை வகிப்பதற்கும் அந்த நிலத்தில் பிறந்த ஒருவரால்தான் முழுவதுமாக முடியும் என்பதை வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. நிலமொன்றில் வாழும் மக்களின் கண்ணீரை, வியர்வையை, கோபத்தை மட்டுமல்ல, தூஷண வார்த்தைகளைக் கூட புரிந்துகொள்வதற்கு வாடகைத் தலைவர்களால் முடிவதில்லை.

தலைவர்கள் – தமது சொந்த நிலத்து மக்களின் வழியாகத்தான் மரணத்தின் பின்னரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அஷ்ரப்பின் பெயரையும் உருவத்தையும் தவிர்த்து – அவரின் பிறந்தகமான கிழக்கு மாகாணத்தில் ‘முஸ்லிம் அரசியல்’ – இன்றுவரை சாத்தியப்படாமைக்கு காரணம், அவருடைய நிலத்து மக்களின் மனங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதனாலாகும்.  

ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக கிழக்கில் அஷ்ரப் நினைவுகூரப்பட்டுக் கொண்டேயிருக்கின்றார். அஷ்ரப் உயிரோடிருந்த போது – அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் கூட, இப்போது அஷ்ரப்பை போற்றிப் புகழும் அரசியலைச் செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அஷ்ரப்பின் பெயரை வைத்து – ஏமாற்று அரசியலும் தாராளமாகவே நடக்கின்றன.

அஷ்ரப் – தேர்ந்ததொரு அரசியல் தந்திரியாக இருந்தார். அதேவேளை தனது சமூகத்தையும், குறிப்பாக தனது நிலத்து மக்களையும் அவர் ஆழமாக நேசித்தார். அதனால் தனது சமூகத்தை அடகு வைக்கும் ‘அரசியலை’ ஒருபோதும் அவர் செய்யவில்லை.

ஆனால் வாடகைத் தலைவர்கள் அப்படியல்ல. தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமக்கு வாக்களித்த சமூகத்தையே ‘விற்றுப் பிழைத்த’ வரலாறுகள் ஏராளமுள்ளன.

சிறுபான்மை அரசியல் தலைவர்களில் ஆறுமுகன் தொண்டமானுக்கும், ‘தந்தை’ என – தமிழர்கள் அழைக்கும் செல்வநாயகத்துக்கும் மட்டுமே உள்ள பெருமையொன்று பற்றி முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், அண்மையில் சிலாகித்து எழுதியிருந்தார்.

‘அரசியல் கட்சியொன்றின் தலைவராக தந்தை செல்வா பதவி வகித்த நிலையில், அவர் அமைச்சராகாமல் அவரின் கட்சிக்குள் – அவருக்கு அடுத்த நிலையில் இருந்த செனட்டர் திருச்செல்வத்தை அமைச்சராக்கினார்.

இவ்வாறே ஆறுமுகன் தொண்டமான் – தான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த முத்து சிவலிங்கத்தை ஒரு முறை கபினட் அமைச்சர் ஆக்கினார்.

அரசாங்கங்களுடன் இணைந்திருந்த – வேறெந்த சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும் இந்த புகழ்மிக்க தைரியமான முடிவை எடுக்கவில்லை. ஆறுமுகன் தொண்டமான் – அவருடைய சமூக மக்களுக்குள் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்திருந்தமையும் மக்கள் மீது அவரும், அவர் மீது மக்களும்  பரஸ்பரம் கொண்டிருந்த செல்வாக்கும் நேசமுமே இந்த தைரியமான முடிவை எடுப்பதற்குக் காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

தான் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கத்தக்கதாக தனது கட்சியிலுள்ள வேறொருவர் அமைச்சரானாலும், தனது தலைமையை அவ்வமைச்சரால் பறித்துக்கொள்ள முடியாது என்ற நம்பிக்கைக்கை ஆறுமுகனுக்கு இருந்தமையினால், அவர் யுக புருஷராகிறார்’ எனத் தெரிவித்துள்ளார் பஷீர் சேகுதாவூத்.

ஆறுமுகன் தொண்டமானின் மரணம் ஏற்படுத்தியுள்ள ‘வெற்றிடத்தை’ ‘மலையகம்’ முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான ‘காலம்’ இன்னுமிருக்கிறது.

ஆறுமுகனின் மரணம் காரணமாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தலைமைப் பதவி நிரப்பப்படும் போது, அந்தக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் மறந்து விடலாகாது. அஷ்ரப்பின் மரணத்தை அடுத்து – முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவியை நிரப்புவதில் ஏற்பட்ட மிகப்பெரும் தடுமாற்றங்களும், அதன் காரணமாக இரட்டைத் தலைவர்கள் அந்தக் கட்சிக்கு நியமிக்கப்பட்டமையும் இங்கு கொள்ளத்தக்கது.

சிங்கங்களின் கர்ஜனைகளால்தான் காடுகள் கம்பீரம் பெறுகின்றன என்பதை, சிங்கங்களின் இழப்புகள்தான் – அநேகமாகப் புரிய வைக்கின்றன.

அஷ்ரப்பின் ‘இல்லாமை’தான், அவரின் ‘இருத்தலின்’ அவசியத்தை கிழக்கு முஸ்லிம்களுக்கு அதிகம் உணர்த்தியது.

அதேபோன்று ஆறுமுகன் இல்லாத மலையக அரசியலில் இப்போதைக்கு சோபை இருக்கப் போவதுமில்லை.

இனி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதற்கும், திட்டுவதற்கும் ஆறுமுகன் இல்லை. எனவே, அவரின் புகழ் பாடுவதன் ஊடாக அவரின் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் வளைத்துப் போடும் அரசியலைச் செய்ய வேண்டிய ‘கையறு’ நிலைக்குள் எதிர்க்கட்சிகள் தள்ளப்படும் நிலை ஏற்படும். அஷ்ரப் மரணித்த பின்னர் அவருக்கு எதிரான கட்சிகள் இப்படித்தான் நடந்து கொண்டன.

எது எவ்வாறாயினும், மலையகத் தமிழர்களின் ஏராளமான தேவைகளை, உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவனாக ஆறுமுகன் தொண்டமான் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது.

ஆனால் சிறுபான்மை சமூகங்களை அரவணைக்கும் மனநிலையற்ற தற்போதைய ஆட்சியாளர்களை – ஆறுமுகன் இல்லாத அரசியலரங்கில், மலையகத் தமிழர் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.

இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது, ஆறுமுகன் தொண்டமான் வசமிருந்த சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்ற செய்தி வெளியாகியுள்ளது.

மிகவும் குறைவான அடிப்படை வசதிகளுடன் வாழ்க்கையை சிரமத்துடன் எதிர்கொள்ளும் மலையக மக்கள், சில நன்மைகளை இலகுவில் பெற்றுக் கொள்வதென்றால், அவர்களைச் சார்ந்த ஒருவர் அமைச்சுப் பொறுப்பை வகித்தல் அவசியமாகும். இந்த ஆட்சியில் ஆறுமுகன் மூலம் மலையகத் தமிழர்களுக்கு ஓர் அமைச்சர் கிடைத்தார். அவரின் மறைவுடன் அதுவும் இல்லாமல் போயிற்று.

ஒவ்வொன்றினையும் இழக்கும் போதுதான் அவற்றின் ‘அருமை’கள் புரியத் தொடங்கும். அஷ்ரப் இல்லாமல் போனபோது முஸ்லிம் சமூகம் தனது கம்பீரத்தை அரசியலரங்கில் இழந்தது.

சிறுபான்மை அரசியல் தலைவர் ஒருவர் அகால மரணமடையும் போது, அவர் சார்ந்த அரசியல் கட்சியும், அவரின் சமூகமும் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும், எவ்வாறெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கும் – அஷ்ரப்பின் மரணத்தின் பின்னரான சம்பவங்கள் உதாரணங்களாக இருக்கின்றன.

சிந்திக்கத் தெரிந்தோருக்கு வரலாற்றில் ஏராளமான பாடங்கள் உள்ளன.

நன்றி: தமிழ் மிரர் (02 ஜுன் 2020)

Comments