ஜுன் 20இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 May 20, 2020

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது.

உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளின் போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய மற்றும் அதன் உறுப்பினர் நலின் அபேசேகர ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

தேர்தலை நடத்த முடியும் என சுகாதார பிரிவினர் உத்தியோகபபூர்வமாக அறிவிக்கும் வரை – தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

தேர்தலை நடத்த முடியும் என சுகாதார பிரிவினர் அறிவித்தல் விடுக்கும் சந்தர்ப்பம் தொடக்கம், தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த சட்டத்தரணி ஷரித்த குணரத்ன சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணி ஷரித்த குணரத்னவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் கிடைத்துள்ள நிலையிலேயே தான் இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், தேர்தல் வர்த்தமானி மற்றும் நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானி ஆகியவற்றிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகளை ஐந்து நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் விசாரணை செய்து வருகின்றது.

இந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணையை நாளை 10 மணிவரை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்