அரச உத்தரவை அலட்சியம் செய்தார் முன்னாள் எம்.பி. நஸீர்; கட்சி அரசியல் செய்யும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல்: மக்கள் விசனம்

🕔 May 19, 2020

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்று திங்கட்கிழமை தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நடத்திய இப்தார் நிகழ்வு குறித்து பாரிய விசனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நேற்று தொடக்கம் பல்வேறு தரப்பினரும் தங்கள் விமர்சனைங்களை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

குறித்த இப்தார் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருக்கு நெருக்கமானோரின் ‘பேஸ்புக்’ பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒன்று கூடல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், நபர்களிடையே இடைவெளிகளைப் பேண வேண்டும் எனவும், வெளியிடங்களுக்குச் செல்லும் போது முகக் கவசங்களை அணிய வேண்டு என்றும் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தையும் மீறும் வகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இப்தார் நிகழ்வு அமைந்திருந்தாக, சமூக ஊடகங்களில் பலரும் குற்றம் சாட்டுடியுள்ளனர்.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் மரைக்காயர் சபையினரும், அந்தப் பள்ளிவாசலின் நிருவாக சபை உறுப்பினர்களும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஊரை வழிநடத்தும் பெரிய பள்ளிவாசலின் முக்கியஸ்தர்கள், அசாதாரணமானதொரு சூழ்நிலையில், நாட்டுச் சட்டத்தை அலட்சியப்படுத்தி இவ்வாறான இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டமை குறித்தும், சமூக வலைத்தளங்களில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கட்சி அரசியல் செயற்பாடுகளில் பள்ளிவாசல் நிருவாக சபை நடுநிலையாகவும், பக்கம் சாராமலும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்தக் கட்சியை ஆதரிப்பது, யாருக்கு வாக்களிப்பது என்பதெல்லாம் தனிநபர் உரிமை என்பதால், பள்ளிவாசல் நிருவாகத்தினர் அதனை பொதுத் தீர்மானமொன்றினுள் புகுத்த முயச்சிக்கக் கூடாது என்கிற வேண்டுகோள்களிலுள்ள நியாயத்தினையும் சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்தல் வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஏ.எல்.எம். நஸீர் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அதேவேளை, அதே ஊரைச் சேர்ந்த பளீல் பி.ஏ. என்பவர் இதே பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாகக் களமிறங்கியுள்ளார்.

எனவே, அட்டாளைச்சேனையிலுள்ள ஒரு வேட்பாளருக்கு மட்டும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அந்த ஊர் பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் நடந்து கொள்கின்றமை கண்டனத்துக்குரியதாகும். இது குறித்து முஸ்லிம் கலாசார திணைக்களம் மற்றும் வக்பு சபை உடனடியாக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீருக்கு இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் ஆசனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை சந்திப்பதற்காக அட்டாளைச்சேனையிலிருந்து சென்ற குழுவில், பெரிய பள்ளிவாசல் தலைவரும் பங்குபற்றியிருந்தமை குறித்தும், ஏற்கனவே மக்களிடையே பாரிய விமர்சனம் உள்ளது.

இந்த நிலையில், மீண்டும் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர், ஒரு கட்சி சார்பாக நடந்து கொண்டுள்ளமையினை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்