தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம்

🕔 May 15, 2020

நாடாளுமன்றத் தேர்த்லை நடத்துவதற்குரிய சாதகமான பதிலைப் பெற்றுக்கொள்வதற்காகவே சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரை அரசாங்கம் நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருப்பது மற்றும் உதவித் தொகை வழங்கலில் பிரதான கட்சியின் பிரதிநிதிகளை நியமித்திருப்பது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – அமைச்சுக்களுக்கான செயலாளர்களை அண்மையில் மாற்றியிருந்தார்.

பல்வேறு அமைச்சுக்களுக்கும் செயலாளர்களை நியமித்த ஜனாதிபதி, சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவை நியமித்தார்.

இறுதிப் போரில் பாரிய பங்கை வகித்திருந்த இவர், தற்சமயம் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து லக்ஸ்மன் கிரியெல்ல கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்திவிட்டதாகவும், பொதுத் தேர்தலுக்கு உகந்த தருணம் வந்துவிட்டதாகவும் அறிக்கையை வெளியிடவே ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கம் பல்வேறு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை நியமித்த போதிலும் சுகாதார அமைச்சிற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரை நியமித்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இவ்வாறு ராணுவ அதிகாரி ஒருவரை சுகாதார அமைச்சுக்கு செயலாளராக நியமித்திருப்பதன் நோக்கம் அரசாங்கத்திற்கு அவசியமாக சுகாதார அறிக்கையை பெற்றுக்கொள்வதே ஆகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் பலசுற்று சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்புக்களின் இறுதியில், சுகாதாரத்துறையினரது பரிந்துரைக்கு அமைய அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் தற்போதைய நிலைமையில் தேர்தலை நடத்தினால் ஆபத்தாகும் என்றும் சமூக இடைவெளியைப் பேணமுடியாமல் போய்விடும் எனவும் சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் அடுத்த சந்திப்புக்களின்போது அரசாங்கத்திற்கு அவசியமான சுகாதார அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தினால் தாக்கல் செய்ய முடியும். இதனூடாக கோவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையை வழங்குவார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் செயலாளர்கள் நியமனங்களை வழங்கி சட்டத்தை மீறியுள்ளது.

அதேபோல 5000 ரூபா உதவித்தொகை வழங்கலிலும் பிரதான அரசியல் கட்சியின் பிரநிதிகளை நியமித்து – அவற்றை அரசாங்கம் செய்தது. இவை தேர்தல்கள் சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம், தற்போதைய நிலையில் நாடு திறந்து விடப்பட்டால் பேராபத்து ஏற்படும் என்று எச்சரித்திருந்தது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்