அல் குரானைப் பார்த்து தொழுகையில் ஓதலாமா; வீட்டில் தொழும் நமக்கு உதவும் விளக்கம்

🕔 April 29, 2020

– ஷீஃபா இப்றாஹிம் (மருதமுனை) –

ஸ்லாமிய மார்க்கமானது ஆன்மீகம் – லெளஹீகம் என்று வாழ்க்கையைக் கூறுபோடவில்லை. அதே நேரம் ஆன்மீகத்துக்காக லெளஹீகத்தையோ, லெளஹீகத்துக்கா ஆன்மீகத்தையோ விட்டுக்கொடுக்காமல், இரண்டு வகை வாழ்க்கைக்கும் சமனான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

இச்சைகளுக்கு அடிமையாகி விடாமல் – இயல்பாக எப்படி வாழவதென்றும், இயல்பற்ற நாட்களிலே இயலாமையில் துவண்டு இறைவனின் நினைவை விட்டும் தூரமாகிவிடாமல், அதையும் இயல்பாய் மாற்றும் கலையையும் இஸ்லாம் – அழகாய் எடுத்தியம்புகிறது.

அந்த வகையில் நாம் இன்று இயல்புநிலை தாண்டிய ஒரு புதிய முடக்கப்பட்ட வாழ்க்கையில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். ‘கசப்பாயினும் உண்மையே பேசு’ என்பது போல, எந்த சூழ்நிலையிலும் தொழுகையை நிலைநாட்டுவது எம்மீது கட்டாயக் கடமையாகும்.

தொழுகையில், கட்டாயம் நிறைவேற்ற வேண்டியவையும் இருக்கின்றன. வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தான தொழுகைகளும் உள்ளன. ஸுன்னத்தான தொழுகை எனும் போது,
● தினமும் ஐவேளைத் தொழுகையின் முன் – பின் ஸுன்னத்துக்கள்.
● ளுஹா தொழுகை
● தஹஜ்ஜுத் தொழுகை
● இஸ்திஹாரா தொழுகை
● தறாவீஹ் தொழுகை
போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

புனித ரமழான் மாதத்தில் நாம் இருக்கிறோம். தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக பள்ளிவாசல்கள் உட்பட அனைத்து வணக்கஸ்தலங்களும் முடக்கப்பட்டு விட்டன. வீடுகள் பள்ளிவாசல்களாகி விட்டன.

இக்கால கட்டத்தில் அதிகமாக கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று; “தொழுகையில் அல்குர்ஆனை பார்த்து ஓதலாமா??”.

இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் அல்குர்ஆனிலோ ஸுன்னாவிலோ – தொழுகையில் அல்குர்ஆனை பார்த்து ஓதுங்கள் என்றோ அல்லது தொழுகையில் அல்குர்ஆனை பார்த்து ஓதுவது தடை என்றோ நேரடியாக வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் எந்த நபரையும் தடுக்கவும் இல்லை.

பொதுவாக – கட்டாயம் செய்யவேண்டும் என்ற விடயங்களையோ, செய்யக் கூடாது எனும் காரியங்களையோ, அல்குர்ஆனில் அல்லாஹ் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ ஏவியிருப்பான். அதை நபி (ஸல்) அவர்களும் நடைமுறைப்படுத்தி இருப்பார்கள்.

ஆனால் இந்த விடையத்தில் ஏவலும் இல்லை விலக்கலும் இல்லை.
ஆனால் தொழுகையில் அல்குர்ஆனைப் பார்த்து ஓதுதல் என்ற விடையம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

• ஆயிஷா (ரழி) அவர்களின் பணியாளரான ‘தக்கவான்’ என்பவர், ஆயிஷா (ரழி) அவர்களுக்கு தொழுகை நடத்துவார். அப்படி தொழுகை நடத்தும்போது அவர் அல்குர்ஆனைப் பார்த்து ஓதுபவராக இருந்தார். இது புகாரியில் (1/245) பதிவு செய்யப்பட்டுள்ளது.

• இந்த செய்தி முஸன்னப் இப்னு அபீ ஷைபா எனும் கிதாபிலும் இன்னும் இமாம் பைககியின் அஸ்ஸுனனுல் குப்றா எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளது.

இமாம்களைப் பொறுத்தவரை;

• இமாம் இப்னு குதாமா, இமாம் இப்னு உஸைமின் போன்றோர் பர்ளு, ஸுன்னத்தான தொழுகைகளில் அல்குர்ஆனைப் பார்த்து ஓதுவதை அனுமதித்துள்ளனர்.

• இமாம் அஹ்மத், இமாம் ஷாபிஈ, இமாம் அபூ யூஸுப் போன்றோர் தொழுகையில் அல்லாஹ்வின் கலாமுடன் எமது மனதினை ஒன்றிக்க வைக்க முடியும் என்பதனால் இதை அங்கீகரித்துள்ளனர்.

• இமாம் பின் பாஸ் அவர்கள் குறிப்பிடுகையில்; “தொழுகை நடத்துகின்ற இமாம் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்யாதவிடத்து அல்குர்ஆனை பார்த்து இமாமத் செய்ய முடியும். அதில் எவ்வித தடையையும் இஸ்லாம் விதிக்கவில்லை. இது மன்தூப் (மார்க்க ரீதியில் அனுமதிக்கப்பட்டது) என்ற நிலையில் உள்ளதாகும்” என்கிறார்.

• இமாம் நவவி அவர்கள் குறிப்பிடுகையில்; தொழுகையில் அல்குர்ஆனைப் பார்த்து ஓதுவது தொழுகையை முறிக்காத செயலாகும் என்கிறார்.

மேற்சொல்லப்பட்ட ஆதாரங்களையும் அறிஞர்களின் கருத்துக்களையும் உற்றுநோக்கும் போது, தொழுகையில் அல்குர்ஆனைப் பார்த்து ஓதுவது தவறில்லை; அது அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

குறிப்பு: கட்டுரையாளர் ‘மௌலவியா’ என்பதும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டப்படிப்பு (சிறப்பு) மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்