நாடாளுமன்றத் தேர்தல்; இன்னுமொரு முறை, ஒத்தி வைக்கப்படலாம்

🕔 April 22, 2020

ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என, மீள் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு முறை தேர்தல் ஒத்தி வைக்கப்படும் சாத்தியம் எழுந்துள்ளது.

ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு, அந்தத் தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதென தேர்தல்கள் ஆணைக்குழு திங்கட்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தேர்தல் திகதி மறு பரிசீலனை செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி ஜூன் மாதம் தேர்தலை நடத்துவதை நோக்கியே தேர்தல் ஆணைக்குழு இயங்கி வருகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத போதிலும், நாட்டிலுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து அந்த சந்தர்ப்பத்தில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எஸ். ரத்னஜீவன் ஹுல் கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிலுள்ள மூன்று உறுப்பினர்களும் ஒன்றிணைந்தே இந்த தீர்மானத்தை எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விதத்திலேயே தாம் செயற்படுவதாகவும், தேர்தல் திகதியை அண்மித்த காலப் பகுதியில் நாட்டின் நிலைமையை அவதானித்து தீர்மானத்தை எட்டுவது குறித்து அப்போது ஆராயப்படும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எஸ். ரத்னஜீவன் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்