உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு; முக்கியஸ்தர்கள் விமர்சனம்

🕔 April 15, 2020

லக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

முதலில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடங்கிய சமயத்தில், அந்த பிரச்சனையை சமாளிப்பதில் தவறான நடவடிக்கைகள் எடுத்ததாகவும், இந்த வைரஸ் தொற்று பரவல் குறித்த உண்மைகளை மூடிமறைத்தாகவும் உலக சுகாதார நிறுவனம் மீது டிரம்ப் குற்றம்சுமத்தியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் கருத்து

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொது செயலாளர் அன்டோன்யு குட்டாரெஸ்; “இந்த நோய்த்தொற்று எப்படி தொடங்கியது, எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்பது போன்றவற்றை புரிந்துகொள்ள, அலசி ஆராய ஒரு நேரம் வரும். அதற்கான நேரமும், சமயமும் இது அல்ல. உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளுக்கு தேவைப்படும் நிதியை நிறுத்துவதற்கும் இது சரியான நேரம் அல்ல” என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறுகையில்; “தற்போதைய நிலையில் உலகத்துக்கு தேவையான பல முக்கிய தகவல்களை அளித்து வரும் உலக சுகாதார அமைப்பை நாம் தொடர்ந்து ஆதரிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆபத்தான முடிவு

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்துவதாக டிரம்ப் எடுத்துள்ள முடிவு ‘மிகவும் ஆபத்தானது’ என மைக்ரோசாஃப்ட் நிறுவுநர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலினா கேட்ஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் சேவை தேவைப்படுகிறது என அவர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு மிக அதிக அளவிலான நிதி வழங்கும் அமைப்புகளில் இவர்களின் ‘கேட்ஸ்’ அமைப்பும் ஒன்றாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்