உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

🕔 April 8, 2020

லக சுகாதார அமைப்பானது, சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பு முறையாகச் செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 04 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-த்தை தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்ற போதும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், கொரோனா பற்றி முன்னரே அறிந்திருந்தும் உலக சுகாதார அமைப்பு முறையான தகவல்களைக் கொடுக்கவில்லை என்று, ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பரவிய பிறகு, தினமும் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து, நாட்டு நிலவரம் மற்றும் உலகின் பிற நாடுகள் பற்றி – ட்ரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில், நேற்றுசெவ்வாய்கிழமை பேசும்போதே, உலக சுகாதார அமைப்பை அவர் விமர்சித்துள்ளார்.

நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசும்போது; “உலக சுகாதார அமைப்புக்கு நாங்கள் பெருமளவில் நிதி வழங்கி வருகிறோம். தற்போது அதை நிறுத்த ஆலோசனை நடத்தி வருகிறோம்”.

“கொரோனா பற்றிய தகவல்களை உலக சுகாதார அமைப்பு முன்னரே அறிந்திருந்தது. ஆயினும் வைரஸ் பரவுவதன் விளைவுகளை அவர்கள் முறையாக எச்சரிக்கவில்லை.

வைரஸை எதிர்கொள்வதில் உலக சுகாதார அமைப்பு சரியாக நடந்துகொள்ளவில்லை. அது சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

சில காரணங்களால் நாங்கள்தான் உலக சுகாதார அமைப்புக்கு அதிகளவில் நிதி வழங்கி வருகிறோம். தற்போது அதன் பெரும் பகுதியை நிறுத்த ஆலோசித்து வருகிறோம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு இல்லை, எங்களின் ஆலோசனை.

சீனாவில் முதல் வைரஸ் தொற்று உறுதியானதும் சீனாவுக்கான எங்கள் நாட்டு எல்லைகளை மூட நாங்கள் உலக சுகாதார அமைப்பினரிடம் ஆலோசனை கேட்டோம். ஆனால், அவர்கள் எல்லைகளை மூடத் தேவையில்லை எனத் தவறான ஆலோசனை மட்டுமே வழங்கினர். நல்லவேளை அவர்களின் கருத்தை நான் நிராகரித்துவிட்டேன். அவர்கள் ஏன் எங்களுக்கு இதுபோன்ற தவறான பரிந்துரையை வழங்கினார்கள்?” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்