ஆயுர்வேத மருத்துவமனைகளை ஊடரங்கு வேளையில் திறக்க அரசாங்கம் தீர்மானம்

🕔 April 7, 2020

னைத்து ஆயுர்வேத மருத்துவமனைகளையும் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நேரத்திலும் திறந்து வைப்பதென அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அத்தியவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரின் தலைமையில் அலறி மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்தகங்களில் ஆகக்குறைந்தது ஒன்றையாவது ஊரடங்கு நேரத்தில் நடமாடும் சேவை மூலம் செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதற்கும் இங்கு முடிவு எட்டப்பட்டது.

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மர மஞ்சள் ஆகியன இந்நாட்களில் அதிகமாக நுகரப்படுவதால், அவற்றை இறக்குமதி செய்ய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு ஊரடங்கு நேரத்தில் சென்று சிகிச்சையளிப்பதற்கு, ஆயுர்வேதத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள மருத்துவர்களுக்கு பயண அனுமதி வழங்குவதற்கும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.

மேலும், நீண்ட காலச் சிகிச்சைக்காக ஆயுர்வேதத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள நோயாளர்களுக்கான மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக விநியோகிக்க அனுமதியளிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Comments