கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில், உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?

🕔 April 1, 2020

கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது.

இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்ய தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

செய்திகள் மற்றும் கொரோனா குறித்து படிப்பதை கட்டுப்படுத்துங்கள்

கொரோனா வைரஸ் குறித்து தினமும் கேட்கும் செய்திகள் நமக்கு கவலை அளிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இந்த செய்திகள் இன்னும் அதிகம் பாதிப்படைய செய்யும்.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியபோது உலக சுகாதார நிறுவனம் மன நிலையை பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகள் சமூக வலைதளத்தில் அதிகம் வரவேற்கப்பட்டன.

பதற்றம் அடைபவர்கள் குறித்து பிரிட்டனின் நிக்கி லிட்பெட்டர் கூறுகையில்; ”கட்டுப்பாட்டை மீறி நிலைமை மோசமடையும்போது ஏற்படும் அச்சம், நிச்சயமற்ற தன்மையை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஏற்படும் கவலை, இவை இரண்டும்தான் நாம் பதற்றம் அடைய காரணமாக உள்ளது” என்கிறார். எனவே இயல்பாகவே பதற்றத்துடன் இருக்கும் நபர்களுக்கு இந்த சூழ்நிலையை எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது,” என்கிறார்.

”நாம் அறியாத பல விஷயங்கள் குறித்துதான் பொதுவாகப் பதற்றம் ஏற்படும். ஏதாவது நடந்து விடுமோ என்ற உணர்வில்தான் பதற்றம் வேரூன்றி இருக்கிறது,” என்கிறார் மனநிலைக்கான அறக்கட்டளை ஒன்றின் செயற்பாட்டாளர் ரோஸி.

செய்திகளைப் படிக்கும்போது கவனம் தேவை. கேண்டில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிக், கொரோனா வைரஸ் குறித்து அதிக செய்திகளைப் படிப்பதே கவலை அளிக்கிறது என்கிறார். ”நான் கவலை அடையும்போது, என் எண்ணங்கள் கட்டுப்பாட்டை மீறி, பேரழிவின் விளைவுகள் மீது செல்லத் தொடங்கியது” என கூறுகிறார். மேலும் தனது பெற்றோர்கள் மற்றும் தனக்குத் தெரிந்த முதியவர்களின் நிலை குறித்தும் கவலையாக இருக்கிறது என்கிறார்.

“பொதுவாக கவலையில் இருந்தால், அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வேன். ஆனால் தற்போது அப்படி செய்ய முடியவில்லை” என்கிறார்.

இணையத்தில் செய்திகளைப் படிப்பது மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது உள்ளிட்ட சில அறிவுரைகளை நிக் கடைபிடித்ததால், தற்போது நல்ல மனநிலையில் தான் இருப்பதாக தெரிவிக்கிறார்.

  • உங்களை பாதிக்கக்கூடிய செய்திகளை காண்பதையும் படிப்பதையும் தவிருங்கள். மாறாக அடிப்படை செய்திகளை அறிய குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் செய்திகளை கவனியுங்கள்.
  • நிறைய தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவிவருகின்றன. எனவே சரியான செய்திகளை ஒளிப்பரப்பும் ஊடகம் அல்லது அரசாங்கம் வெளியிடும் தகவல்களை மட்டும் நம்புங்கள்.
  • சமூக ஊடகத்தில் இருந்து விலகி இருங்கள்.

சமூக வலைத்தளம் அதிகம் வேண்டாம்

மான்செஸ்டரில் வசிக்கும் அலிசன், ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் குறித்த அனைத்து செய்திகளையும் படித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக இருந்த எல்லா ஹாஷ்டேகுகளையும் பின் தொடர்ந்துள்ளார். ஆனால் நாளடைவில் இதனால் மனம் வருந்தி பல முறை அழுததாக கூறுகிறார்.

எனவே தற்போது சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவிடாமல், விலகி இருப்பதாகவும், தமக்கு கவலை அளிக்கும் எந்த செய்திகளையும் பார்ப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

  • கொரோனா வைரஸ் குறித்து அடிக்கடி தகவல்களை வெளியிடும் வாட்ஸ் ஆப் குருப்புகளை ‘மியூட்’ செய்யவும்.
  • பேஸ்புக்கில் உங்கள் மனதை காயப்படுத்தும் பதிவுகளை ‘ஹைட்’ செய்யுங்கள்.
  • கை கழுவுங்கள் – ஆனால் அடிக்கடி வேண்டாம்.

கைகளை கழுவுங்கள், ஆனால் அதீதமாக அல்ல

ஓ.சி.டி எனப்படும் – ஒரு செயலை பலமுறை செய்ய தூண்டும் மனநோய்க்கு ஆளாகி, தேவையான ஆலோசனைகள் பெற்று தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு தற்போது குழப்பம் நிலவுகிறது.

குறிப்பாக ஓ.சி.டி யால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவகையினர் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மேற்கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர்களுக்குள் தற்போது குழப்பம் நிலவும்.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க தற்போது அவர்கள் மீண்டும் சோப் மற்றும் சானிடைசர் பயன்படுத்த ஆரம்பித்தால், பிறகு மீண்டும் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது சவாலாக இருக்கும்.

எந்த வகையான ஓ.சி.டி யால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தங்களை திசைதிருப்பி கொள்ள வெளியில் செல்வார்கள். ஆனால் தற்போது அவர்களை திசைதிருப்பிக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நண்பர்களுடன் பேசுங்கள்

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வரும் இந்த சூழலில் பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நேரலாம். எனவே இந்த நேரத்தில் நீங்கள் அக்கறைகொள்ளும் அனைத்து நண்பர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரியை கேட்டுவாங்கிக்கொள்ளுங்கள். அவர்களுடன் உரையாட நேரம் ஒதுக்குங்கள்.

நீங்கள் தனிமைப்பட்டிருந்தால் உங்களுக்கென சில வேலைகளை பட்டியலிட்டு கொள்ளுங்கள்.

ஒவ்வொருநாளும் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுங்கள். இதனால் இறுதியில் உங்கள் தனிமையான நாட்களை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினீர்கள் என்ற நிறைவு ஏற்படும்.

உங்கள் மனம் இயற்கையை அணுகட்டும்

இயற்கையையும் சூரிய ஒளியையும் முடிந்தவரை உங்கள் மனம் அணுகட்டும். நல்ல உணவு உண்ணுங்கள், நிறைய தண்ணீர் குடிங்கள், நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள்.

  • நீங்கள் சாதாரணமாக செயல்படுவதைப் போல செயல்பட வேண்டாம். சிறிதும் எதிர்வினையாற்றவேண்டாம். அமைதி காக்கவும்.
  • நீங்கள் நினைக்கும் அனைத்தும் சரி தான் என்று நம்பாதீர்கள். அது வெறும் உணர்வோ, யோசனையோ மட்டும் தான்.
  • உங்கள் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் எதிர்வினையாற்றத் தேவையில்லை.
  • இந்த தருணத்தை பற்றி மட்டும் சிந்தியுங்கள். ஏனென்றால் இந்த தருணம் நன்றாகத்தான் உள்ளது.

நன்றி: கிறிஸ்டி ப்ரூவர் (பிபிசி)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்