மூச்சு விடுவதில் சிரமம்; கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிர், வைத்தியசாலையில் அனுமதி

🕔 March 25, 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் –

மூச்சு விடுவதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபையிர், நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட இவர், அதன் பின்னர் கட்டாரில் இருந்து வருகை தந்த தனது உறவினர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார்.

அந்த காலப்பகுதியில் அவருக்கு இருமலோ காய்ச்சல் தொண்டை நோய் இருக்கவில்லை ஆனாலும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் குறிப்பிகையில்;

“இது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா சம்பந்தப்பட்ட வைத்திய பிரிவுக்கு பொறுப்பாக இருக்கின்ற வைத்திய நிபுணர்களுடன் ஆலோசித்தேன்.

தொடர்ச்சியாக எனக்கு இருக்கின்ற மூச்சு திணறல், கொரோனா நோயுடைய தாக்கமாக இருக்கலாம் என்று பயந்தேன். அது மாத்திரமல்லாமல் தொடர்ச்சியான மூச்சு கஷ்டம் காரணமாக வைத்திய நிபுணர் குழுவின் ஆலோசனைக்கு அமைவாக, எக்ஸ்ரே ஒன்றையும் பெற்றுக் கொண்டேன்.

இருந்த போதும் எக்ஸ்ரேயில் எந்தவிதமான பிரச்சினையுமில்லை என்று அறிந்து கொண்டேன். ஆனாலும் தொடர்ச்சியான மன அழுத்தம், வீட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலை, ஆதரவாளர்களின் சந்திப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வைத்திய நிபுணரின் ஆலோசனைக்கு அமைவாக, நேற்று பிற்பகல் ஏறாவூர் வைத்தியசாலை ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

இது தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் இதுவாகும். நான் குணமடைந்து வீடு திரும்ப அதிகமாக எனக்கு துவா செய்து கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்