கல்முனை மாநகர சபை எல்லைப் பகுதிகளில், கட்டட நிர்மாண வேலைகளுக்கு, மறு அறிவித்தல் வரை தடை

🕔 March 22, 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா –

ல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனைத்து கட்டட நிர்மாண வேலைகளையும் மறு அறிவித்தல் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வுத்தரவை மீறி கட்டுமான வேலைகளை மேற்கொள்கின்ற வீட்டு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“தற்போதுள்ள கொரோனா இடர்கால நிலைமையை கருத்தில் கொண்டு, எமது மாநகர சபை உள்ளிட்ட அரச அலுவலகங்கள் இயங்காமலிருப்பதை சாதகமாக பயன்படுத்தி, சிலர் சட்டவிரோத கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.

இவ்விடயம் குறித்து ஆராயுமாறு சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். இதன்போது சட்ட விரோத கட்டுமாணங்கள் கண்டறிப்பட்டால், அவை எந்தவித முன்னறிவித்தலும் இன்றி உடைத்தகற்றப்படும் என்பதோடு நஷ்டஈடும் அறவிடப்படும்” என்று மாநகர முதல்வர் கூறினார்.

ஆகையினால் அனுமதி பெறப்படாத கட்டடங்கள் மாத்திரமன்றி அனுமதி பெறப்பட்ட கட்டடங்களாயினும் அவற்றுக்கான நிர்மாணப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை வீதியோரங்களில் குவித்து வைக்கப்பட்டு, போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் கட்டட இடிபாடுகள் மற்றும் பொருட்களை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ள மாநகர முதல்வர்; “போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்