தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

🕔 February 13, 2020

– அஹமட் –

ம்மாந்துறையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஜப்பான் மொழிக் கற்கைக்கான நிலையம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

எவ்வாறாயினும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில், இந்த நிகழ்வுக்கு தனது கட்சி சார்ந்த முக்கிய அரசியல்வாதிகள் எவரையும் அழைத்திருக்கவில்லை.

மேலும், அந்த நிகழ்வுக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் தினேஸ் ஆகியோரின் படங்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் ஆகியோரின் படங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

இதனை வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், ஆளுந்தரப்புக்கு மாறி விட்டார் என்கிற பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளன.

ஆனால், அந்தப் பேச்சுக்களில் உண்மைகள் இல்லாமலுமில்லை.

மஹிந்த பக்கம் தாவல்

நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற அரசியல் குழப்பத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்த சமயம், அப்போது அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் தனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முடிவுக்கு மாற்றமாக இணைவதற்கு தீர்மானித்திருந்தார்.

இதனையடுத்து இஸ்மாயிலுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று அப்போது வழங்கப்படவிருந்ததாகவும், இறுதி நேரத்தில் அது ரத்துச் செய்யப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இதன் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் சில நாட்கள் தொடர்பற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயிலை, அந்தக் கட்சிக்குள்ளிருந்த முக்கியஸ்தர்கள் சந்தித்து, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனைச் சந்திக்க வைத்து, மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்தனர்.

எவ்வாறாயினும், தற்போது புதிய அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் மஹிந்த தரப்புடன் இணைந்து கொள்ளப் போகிறார் என்கிற பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன.

இந்த நிலையில்தான், அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை அழைத்து, தனது சொந்த ஊரான சம்மாந்துறையில் அமையப் பெற்றுள்ள ஜப்பான் மொழிக் கற்கை நிலையத்தை இஸ்மாயில் திறந்து வைத்துள்ளார்.

“மொட்டில் களமிறங்க வேண்டும்”

நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் மீது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை உள்ளிட்ட அந்தக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஏற்கனவே நம்பிக்கை இழந்த நிலையில்தான் உள்ளனர்.

கடந்த மாதம் அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்திருந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், தனது கட்சி முக்கியஸ்தர்களை அழைத்து – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தரப்புடன் கூட்டணியமைத்துப் போட்டியிடுவது என்று ஆலோசனை கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் மட்டும், மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

அப்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் என்ன முடிவுடன் இருக்கின்றார் என்பதை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.

கட்சி மாறுவார்

இந்தப் பின்னணில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் – நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து விலகி, வேறொரு கட்சியில் இணைந்து மஹிந்த ராஜபக்ஷவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளார் என்றும், அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சம்மாந்துறைக்காக எம்.பி. பதவி

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட இஸ்மாயில் – அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

ஆயினும் தேர்தல் காலத்தின்போது; ‘சம்மாந்துறைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை வழங்குவேன்’ என்று, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வழங்கியிருந்த வாக்குறுதிக்கு அமைய, இஸ்மாயிலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்தார்.

புத்தளத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கியிருந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வைத்து, அதனையே இஸ்மாயிலுக்கு அந்தக் கட்சி வழங்கியது.

அந்த சமயத்திலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனிடம் சம்மாந்துறையைச் சேர்ந்த இஸ்மாயிலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டாம் என்றும், அதனை எடுத்துக் கொண்டு அவர் மஹிந்த தரப்புக்கு மாறி விடுவார் என்றும் பலர் கூறியிருந்தனர்.

ஆயினும் சம்மாந்துறைக்கு வழங்கிய வாக்குறுதிக்காக இஸ்மாயிலை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் நியமித்தார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடந்த காலத்தில் பதவி வகித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்