கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை முறையீடு

🕔 January 10, 2020

கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைந்துள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் பகிடிவதை செய்வதாக, புதிய மாணவிகளின் பெற்றோர் பல்கலைக்கழக நிர்வாகததுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

புதிய மாணவர் கறுப்பு நிற ஹபாயா மற்றும் கருப்பு நிற சப்பாத்து அணிந்து வருவதோடு, கறுப்புத்தில்தான் பையினையும் கொண்டுவர வேண்டும் என்று, சிரேஷ்ட மாணவிகள் அச்சுறுத்தியுள்ளனர். இந்த கட்டளையை மீறும் புதிய மாணவிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் சிரேஷ்ட மாணவிகள் கூறியுள்ளனர்.

“நாங்கள் கருப்பு நிற ஆடைகள் அணிவதில்லை. நாங்கள் எற்கனவே ஆடைகள், சப்பாத்துகள், பைகள் எல்லாம் வாங்கி விட்டோம்.  இனிமேல் ஆடைகள் வாங்குவதற்கு எங்கள் பெற்றோரிடம் பணம் இல்லை”  என்று கூறிய புதிய மாணவிகளிடம்; ”அப்படியானால் இந்த பல்கலைக்கழகத்தில் உங்களுக்கு கல்வி கற்க முடியாது” என சிரேஷ்ட மாணவிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த அச்சுறுத்தலினால்  புதிய மாணவிகள் சிலர் மீண்டும் 20ம் திகதி ஆரம்பமாகும் வகுப்புகளுக்கு செல்ல தயக்கம் காட்டுவதாக, குறித்த  மாணவிகளின் பெற்றோர் தமது  முறைப்பாட்டில் தொிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

நேற்று 09ம் திகதி கொழும்பு பல்கலைக்கழத்தில் புதிய மாணவர்களுக்கான அனுமதி இடம்பெற்றது. சுமார் 800 புதிய மாணவர்களுக்கான பதிவும் பெற்றோர்களுக்கான ஒரு முக்கிய கூட்டமும் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பாக உரையாற்றிய பேராசிரியா்கள்; பகிடிவதையை கொழும்பு பல்கலைக்கழகம் முற்றாக தடை செய்திருப்பதால் அதில் ஈடுபடும் மாணவர்கள் பல்கலைக்கழக சட்டத்துக்கும் நாட்டின் சட்டத்திற்கும் அமைய தண்டிக்கப்படுவார்கள் என்று புதிய மாணவர்களின் பெற்றோருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தனர். புதிய மாணவர்கள் அடுத்து வரும் வருடங்களில் பகிடிவதையில் ஈடுபட்டால் இதே மாதிரியான சட்ட நடவடிக்கையே உங்களது பிள்ளைகள் மீதும் எடுக்கப்படும் என்றும் இதன்போது பல்கலைக்கழக நிருவாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

மேலும் பகிடிவதை தொடர்பான பிரச்சினைகளை அறிவிப்பதற்காக பல்கலைக்கழக தொலைபேசி இலக்கம் ஒன்றும் பெற்றோருக்கு அந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த அறிவித்தலின் சூடு ஆறுவதற்கு முன்னர்,  புதிய மாணவிகள் தமது பெற்றோருடன் சமூகமளித்திருந்த நிலையில், சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகளின் கடுமையான நெருக்குதல்களுக்கும், மன உளைச்சல்களுக்கம் அச்சுறுத்தல்களுக்கும் புதிய மாணவிகள் முகம் கொடுத்த அவலம் நிகழ்ந்துள்ளது.

இந்த அச்சுறுத்தல்கள் மூலம் புதிய மாணவிகள் பலத்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். புதிய மாணவிகள்  நேற்றைய தினம் எதிர்கொள்ளவிருந்த ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்ப பரீட்கைகளை எதிர்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதிய முஸ்லிம் மாணவியொருவரின் தந்தை, அச்சுறுத்தல் விடுத்த சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகளிடம் வினவிய போது; “எங்கள் கட்டளைகளை புறக்கணித்தால் உங்கள் பிள்ளைக்கு சிரேஷ்ட மாணவிகளின் உதவி கிடைக்காமல் போகும். அதனால் நாங்கள் சொல்வது போல நடப்பது நல்லது” என்று அச்சுறுத்தும் தோரணையில் பேசியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட புதிய முஸ்லிம் மாணவியின் தந்தை;

“நேற்றைய தினம்  சிரேஷ்டசிங்கள மாணவர்கள் சிரித்த முகத்துடன் புதிய மாணவர்களை வரவேற்று உபசரித்து வழிகாட்டல்களை வழங்கி வந்தனர். இதை பார்த்த போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது”. 

“இந்நிகழ்விற்கு சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகள் எந்த பங்களிப்பும் வழங்காத நிலையில்தான், இந்த அச்சுறுத்தல் இடம்பெற்றது. கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் பலர் கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து வருகின்றனர். எங்கள் பிள்ளைகளும் கறுப்பு நிற ஆடைகள் அணிவதில்லை.  இது அவரவர் உரிமை.  இந்த உரிமையில் தலையிடுவதற்கு இந்த சிரேஷ்ட முஸ்லிம் மாணவிகளுக்கு அதிகாரம் வழங்கியது யார் என்பதே எமது கேள்வி”.

“அண்மைக்காலமாக கடுமையான பிரச்சினைகளை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தாம் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு கும்பல்  இன்னும் தீவிரவாதத்தை பல்கலைக்கழகங்களுக்குள் புகுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த சக்திகள் கட்டாயம் இனம் காணப்பட வேண்டும்”.

“எங்கள் பிள்ளைகள் முற்றாக கறுப்பு மயமாகத்தான் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்த இவர்கள்,  கல்யாண விருந்துக்கு  வந்தவர்கள் போல் கலர் கலர் கவர்ச்சிகர ஆடைகளில் தோன்றி, சொகுசாக அமர்ந்துகொண்டு இருந்ததை எம்மால் காணக் கூடியதாக இருந்தது”.

“நாட்டில் முஸ்லிம்கள் பாரிய சிக்கல்களுக்கு கடந்த காலங்களில் முகம் கொடுத்து விட்டு  இருக்கும் நிலையில், இத்தகைய தீவிரவாத, மதவாத, நாசகார செயற்பாடுகள் முளையில் கிள்ளியெறியப்பட வேண்டும்”.

“இந்த செயற்பாடு தண்டனைக்குரிய குற்றமும் மனித உரிமை மீறலுமாகும். இந்த சிரேஷ்ட மாணவிகள் முஸ்லிம் கலாசார ஆடைகளை அணிந்து கொண்டு முஸ்லிம் அடையாளத்தோடு இந்த பகிடிவதை என்ற  ஷைத்தானிய செயற்பாடுகளில் ஈடுபடுவது இஸ்லாத்திற்கு செய்யும் துரோகமாகும்”.

“எமது  பிள்ளைகள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்த வைத்த முதல் நாளே, அவர்கள் மீது உளவியல் ரீதியாக தாக்குதல் தொடுத்த சிரேஷ்ட மாணவிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, ஜனாதிபதி உட்பட சகல தரப்பினரிடமும் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் சார்பாக  வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்