அட்டாளைச்சேனையில் சர்ச்சை வீதிகளுக்கு முற்கொடுப்பனவு வழங்கும் முயற்சி: பிரதேச செயலாளரின் அவசரத்துக்கு காரணம் என்ன?

🕔 December 29, 2019
கொங்றீட் ஆக நிர்மாணிக்கப்பட வேண்டிய வீதிக்கு, முற்கொடுப்பனவு பெறும்பொருட்டு அவசரமாக கொட்டப்பட்ட மணல்…

– அஹமட் –

ட்டாளைச்சேனையில் சர்ச்சைக்குரிய இரண்டு வீதி நிர்மாண வேலைகளுக்கான முற்கொடுப்பனவுகளை ஒப்பந்தகாரர்களுக்கு அவசர அவசரமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருவதாகவும், இதன் பின்னணியில் பல்வேறு மோசடிகள் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அட்டாளைச்சேனையிலுள்ள வயற்காணிகளுக்கிடையில் அமைந்துள்ள நாவக்காடு வீதியை புனரமைப்பதற்கென 36 லட்சம் ரூபாவும், அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு பாவங்காய் வீதியில் அமைந்துள்ள 03ஆம் மற்றும் 04ஆம் குறுக்கு வீதிகளை கொங்றீட் வீதிகளாக அமைப்பதற்கு 50 லட்சம் ரூபாவும், அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறிப்பிட்ட இரண்டு வீதி நிர்மாண வேலைகளையும் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கும் பொருட்டு, பகிரங்க விலைமனுக் கோரியதாக பொய்யான ஆவணங்களை அட்டாளைச்சேனை பிரதேசசெயகலத்தினர் தயார் செய்து வைத்துள்ளபோதும், உரிய முறைப்படி அவ்வீதிகளுக்கு பகிரங்க விலைமனுக்கள் கோரப்படவில்லை என்பது அம்பலமானது.

தமக்கு வேண்டிய ஒப்பந்தகாரர்கள் இருவருக்கு மேற்படி இரண்டு வீதி நிர்மாண வேலைகளையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வழங்கி விட்டு, தாங்கள் பகிரங்க விலைமனுக் கோரியதாகவும், முறைப்படியே ஒப்பந்த வேலைகளை வழங்கியதாகவும் நாடகமாடி வருகின்றார் என புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்த வீதி நிர்மாண வேலைகளை நிறுத்தி விட்டு, புதிதாக பகிரங்க விலைமனுக்களை கோருமாறு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு பொதுமகன் ஒருவர் கோரிக்கை கடிதமொன்றை வழங்கிய போதும் அதனை உதாசீனம் செய்துவிட்டு, குறித்த வீதி வேலைகளை செய்வதற்கான அனுமதியை ஒப்பந்தகாரர்களுக்கு பிரதேச செயலாளர் வழங்கினார்.

இதனையடுத்து, குறித்த வீதிகளுக்கான விலை மனுக்கள் கோருவதில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று முறையிட்டதோடு, லஞ்ச – ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிலும் இது தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்படி வீதி நிர்மாண வேலைகளில் 05 வீதம் கூட நிறைவு செய்யப்படாத நிலையில், அந்த வீதி வேலைகளுக்கான ஒப்பந்தகாரர்களுக்கு பெருந்தொகை முற்பணம் வழங்குவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அறியக் கிடைக்கிறது.

இதன்பொருட்டு, கொங்றீட் ஆக நிர்மாணிக்கப்பட வேண்டிய வீதிக்கு நேற்றைய தினம் அவசர அவசரமாக சிறிதளவு மணல் கொட்டப்பட்டுள்ளதாகவும், அதனைக் காட்டி முற்கொடுப்பனவு எனும் பெயரில் பெருமளவு பணம், கொந்தராத்துக்காரர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் பிரதேச செயலகத்திலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

வருடம் நிறைவடைவதற்குள் இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு பிரதேச செயலாளர் தீர்மானத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேற்படி வீதி வேலைகளுக்கு முற்கொடுப்பனவாக அதிகளவு பணத்தை வழங்கும் நடவடிக்கைக்கு, பிரதேச செயலகத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் துணை போவதாகவும் அறியக் கிடைக்கிறது.

ஏற்கனவே, முறையற்ற வகையில் ஒப்பந்த வேலைகளை வழங்கி விட்டு, பின்னர் அந்த வீதிகளுக்கான வேலைகள் இடம்பெறுவதாகக் காட்டி, செய்யாத வேலைகளுக்கு பெருமளவு முற்கொடுப்பனவு வழங்க முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் இந்த நடவடிக்கை குறித்து, உயர் மட்டங்களுக்கு நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாகவும், சமூக ஆர்வலர்கள் சிலர் புதிது செய்தித்தளத்திடம் தெரிவித்தனர்.

கொங்றீட் ஆக நிர்மாணிக்கப்பட வேண்டிய வீதிக்கு, முற்கொடுப்பனவு பெறும்பொருட்டு அவசரமாக கொட்டப்பட்ட மணல்…

Comments

புதிது பேஸ்புக் பக்கம்