அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை முன்பாக, மாடுகள் தொல்லை: அலட்சியமாக இருக்கும் பிரதேச சபை

🕔 October 27, 2019

– முன்ஸிப், படங்கள்: குலாம்டீன்

ட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் காலாசாலை முன்பாகவுள்ள பிரதான வீதியில் மாடுகள் இரவு – பகலாக தொடர்ந்தும் நடமாறுகின்றமை காரணமாக, பிரயாணிகளும் பொதுமக்களும் கடுமையான ஆபத்துக்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியிலேயே இவ்வாறு மாடுகள் தொடர்ச்சியாக நடமாடுகின்றன.

மாடுகள் தொடர்ச்சியாக நடமாடும் இந்த இடத்தில், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மட்டுமன்றி கல்விக் கல்லூரியின் வாயிலும் அமைந்துள்ளது. சற்று தூரத்தில் கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியும் உள்ளது.

பிரதான வீதியை மறித்து, ஆசியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாக இவ்வாறு மாடுகள் காணப்படுகின்றமை காணமாக, அடிக்கடி இங்கு விபத்துகள் ஏற்படுவதோடு, இந்த இடம் துர்நாற்றம் வீசும் பகுதியாகும் மாறியுள்ளது.

இது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என – பல தரப்பினர் அறிவித்தும், எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வீதியில் கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளைப் பிடித்து நடவடிக்கை எடுத்தால், மாடுகளின் உரிமையாளர்கள் அந்தப் பகுதியைச் சேரந்த பிரதேச சபை உறுப்பினர்களுடன் முரண்படுவார்கள் என்பதனாலும், அவ்வாறான நிலைமை ஏற்படுவது அரசியல் ரீதியாக தமக்கு நல்லதல்ல என்பதாலும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களும், இவ்விடயத்தைக் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.

அட்டாளைச்சேனை ஆளுந்தரப்பு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸின் வியாபார நிலையத்திலிருந்து சில மீற்றர் தூரத்திலேயே, மாடுகள் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபையினர் தொடர்ந்தும் இது தொடர்பில் அலட்சியமாக இருப்பார்களாயின், இதனால் ஏற்படும் விபத்துக்களுக்கு அவர்களே பொறுப்புக் கூற வேண்டி ஏற்படும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments