ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்: ஒரு தெளிவுபடுத்தல்
– புதிது செய்தியாளர் –
பயங்கரவாதி சஹ்ரானுடன் – தான் காணப்படுகின்ற புகைப்படத்தையும், சஹ்ரானின் சகோதரன் றிழ்வான் என்பவனை தான் பார்வையிடுவது போன்ற படத்தினையும் ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டு, தன்னை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவதைப் போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார்.
வசந்தம் தொலைக்காட்சியின் ‘அதிர்வு’ நிகழ்வில் இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொந்தராத்து வேலையாக இதனைச் செய்ததாகவும் அவர் இதன் போது கூறியிருந்தார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ‘புதிது’ மறுத்திருந்தது.
எவ்வாறாயினும், மு.கா. தலைவர் சஹ்ரானுடன் இருக்கும் படத்தினையும், சஹ்ரானின் சகோதரன் றிழ்வான் என்பவன் காயப்பட்டிருந்த நிலையில் – அவனை மு.கா. தலைவர் பார்வையிடும் புகைப்படத்தையும் உள்ளடக்கி, 2015 ஓகஸ்ட் 23ஆம் திகதியன்று ‘புதிது’ செய்தியொன்றை வெளியிட்டுள்ளமை, எமது தேடலில் தெரியவந்துள்ளது.
‘காத்தான்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை மு.கா. தலைவர் பார்வையிட்டார்; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் உத்தரவு’ எனும் தலைப்பிடப்பட்டிருந்த அந்த செய்தியையும் படங்களையம், காத்தான்குடி செய்தியாளர் பழுலுல்லா பர்ஹான், புதிதுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அந்தப் படங்கள், புதிது செய்தித்தளத்தின் பெயர் பதிக்கப்பட்டு அந்தச் செய்தியுடன் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதாவது, சஹ்ரான் என்பவன் 21 ஏப்ரல் 2019ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு சுமார் 04 வருடங்களுக்கு முன்னர், சஹ்ரான் என்பவர் யார் என அறியப்படாத நிலையில் ‘புதிது’ வெளியிட்ட படங்களை ஆதாரமாகக் காட்டி, மு.கா. தலைவருக்கு எதிராக ‘புதிது’ செய்தித்தளம் செயற்படுவதாக ஹக்கீம் கூறியிருப்பது நகைப்புக்கிடமானதாகும்.
(இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் 2015ஆம் ஆண்டு, ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்ட செய்தியில் இருந்தவை)
தொடர்பான செய்திகளையைக் காண்பதற்கு:
02) மு.கா. தலைவருக்கு ‘புதிது’ தொடர்பில் ஏற்பட்டுள்ள கிலேசம்: அவலை நினைத்து, உரலை இடிக்கின்றார்