உதுமாலெப்பை ஹீரோ ஆகுவார்: மீளிணைவு நிகழ்வில் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 October 16, 2019

முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவாறே ‘ஹீரோ’ ஆகுவார்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர் தங்களது ஆதரவாளர்கள் சகிதம் இன்று புதன்கிழமை கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்துகொண்டனர்.

அவர்களுடன் தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹ்ஜி, பொத்துவில் அமைப்பாளர் ஏ. பதூர்கான், அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் இறக்காமம் அமைப்பாளருமான எம்.எஸ்.எம். பரீட், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ். ஜஃபர், மூதூர் பிரதேச அமைப்பாளர் நவாஸ், அரசியல் உயர்பீட உறுப்பினர் எம்.எல்.எம்.ஏ. காதர் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இணைந்துகொள்ளும் நிகழ்வு தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் எம்முடன் மீளிணைவதை மனதார வரவேற்கிறேன். கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களான இவர்கள் எதிர்காலத்தில் கட்சியை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கிறது.

நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடைபெறும் இந்த மீளிணைவானது தனிமனிதனை விடுத்து, சமூகத்தை பலப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். கட்சியில் இருக்கின்றவர்களை பலவீனப்படுத்தாமலும், புதிதாக வருபவர்களை மலினப்படுத்தாமலும் செயற்பாடுகளை பகிர்ந்துகொண்டு ஒருமித்து பயணிக்க வேண்டும். இப்போது எல்லோரும் ஒன்றுசேர்ந்து உத்வேகத்துடன் கட்சியை வழிநடத்த வேண்டும்.

தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பரிபாலன திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்பதற்காக நாங்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றோம். காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளரிடம் பேசியிருக்கின்றோம். ஒலுவில் துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தீர்க்கின்ற பாரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு தலையிடியான பிரதேசமாக சாய்ந்தமருது மாறியிருந்தது. பள்ளிவாசல் நிர்வாகத்தினரும், சுயேட்சைக்குழு உறுப்பினர்களும் எங்களை பலதடவைகள் சந்தித்து பேசியிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடு தொடர்பில் அவர்களுக்கு இப்போது சரியான தெளிவு ஏற்பட்டிருக்கிறது. கல்முனைக்கு பாதகமில்லாமல் சாய்ந்தமருதுக்கு சபை வழங்குவது தொடர்பில் கட்சித் தலைமைமீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போக மாட்டாது.

சமூகத்துக்கு தேவையான வேட்பாளர் ஒருவரை நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறோம். துடிப்பான இளம் ஜனாதிபதியை கொண்டு வருவதற்கான தேர்தல் பிரசாரப் பணிகளில் அனைவரும் பங்களிப்புச் செய்யவேண்டும். எதிர்வரும் 16ஆம் திகதி சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு எங்களது வாக்களிப்பு விகிதாசாரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

எம்.எஸ். உதுமாலெப்பை உரையாற்றும்போது கூறியதாவது;

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபுடன் நாங்கள் கட்சியிலிருந்த காலத்தில் நான் யாப்பு, சட்டங்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. தலைவர் சொன்னால் அதை அப்படியே செய்கின்ற அளவுக்கு அவருக்கு விசுவாசமாக இருந்தோம். தேசிய காங்கிரஸ் ஊடாக இரண்டு தடவை மாகாண சபைக்கு சென்றிருக்கிறேன். நான் கட்சியில் இருக்கும்வரை அதாஉல்லாவுக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே இருந்திருக்கிறேன்.

தலைமைத்துவம் எங்கள் மீது சந்தேகப்பட்டால், ஒரு வினாடிகூட நாங்கள் கட்சியில் இருக்கமாட்டோம். அதாஉல்லாவைவிட எனக்கு அதிக மக்கள் ஆதரவிருப்பதாக சிலர் அவரிடம் சொல்லியிருக்கின்றனர். அதனை நம்பி எங்களை சந்தேகப்பட்டபோது நாங்கள் வெறும் ஆட்களாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி வந்தோம். அட்டாளைச்சேனை, பொத்துவில், திருகோணமலையிலுள்ள தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் என்னுடன் சேர்ந்து கட்சியிலிருந்து வெளியேறினார்கள்.

பல கட்சிகள் எங்களை உள்வாங்கும் நோக்கில் அழைப்பு விடுத்தன. என்னுடன் சேர்ந்து கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடும் நம்பிக்கையும் ஏற்பட்டது. நான் இங்கு வரும்வரைக்கும் பல கட்சிகளிடமிருந்து வந்த அழைப்புகளை நிராகரித்துவிட்டுத்தான், இப்போது முஸ்லிம் காங்கிரஸ் என்ற தாய்க் கட்சியில் மீள இணைந்திருக்கிறேன்.

முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதை புத்திசாதுரியமாக கையாண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதை நாங்கள் என்றைக்கும் மறக்கமுடியாது. குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகளையும், சமூகத்தையும் பாதிக்கின்ற விடயங்கள் நடைபெறவிருந்தபோது, ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.

சிறுபான்மையினர் எந்தக் காரணத்துக்காகவும் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர். நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற காலகட்டத்தில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியை பலப்படுத்தும் நோக்கில் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நாங்கள் இணைந்திருக்கின்றோம். எதிர்வரும் காலத்தில் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்து புதியதொரு யுகம் படைப்போம்” என்றார்.

ஏ.எம். ஜெமீல் உரையாற்றும்போது கூறியதாவது;

நான் மாணவ தலைவனாக இருக்கின்ற காலத்திலிருந்தே முஸ்லிம் காங்கிரஸுடன் எனது பயணத்தை ஆரம்பித்தேன். அதிலிருந்துகொண்டே சமூகத்துக்கும் கட்சிக்கும் என்னாலான பல அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறேன். அண்மையில் எனக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணமாக கட்சியை விட்டு விலகிச் சென்றிருந்தாலும், சமூகத்தின் நலன்கருதி தூரநோக்கு சிந்தனையுடன் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியை துறக்கும் முடிவுக்கு அரசியல்வாதிகளை வழிநடத்தியது என்னை கவர்ந்திழுத்தது.

முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துவதற்கு பொருத்தமான அரசியல் இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்து கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியை தலைமைதாங்கும் ரவூப் ஹக்கீம், சமூகத்தை வழிநடத்துவதற்கு மிகப் பொருத்தமான தலைவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். சமூகத்தை சரியான பாதையில் கொண்டுசெல்லும் கட்சியில் இப்போது என்னை மீளிணைத்துக் கொண்டுள்ளேன்.

எவ்வித நிபந்தனைகளும் விதிக்காமல் சாதாரண அங்கத்தவனாக நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்கிறேன்.

கல்முனைக்கு பாதிப்பில்லாத வகையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையினை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கையை மாத்திரம் நான் தலைமையிடம் விடுத்திருக்கிறேன். அதனை கட்சித் தலைமை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்றார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்