மாகாண விளையாட்டில் மூன்று தங்கம் வென்ற அட்டாளைச்சேனை இளைஞருக்கு, தேசிய போட்டியில் பங்கு பற்ற சந்தர்ப்பம் மறுப்பு: மாகாணப் பணிப்பாளர் அநீதி

🕔 October 3, 2019

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.எம். றிஸ்வான் எனும் இளைஞருக்கு, தேசிய விளையாட்டுப் போட்டியில் 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்கான சர்ந்தப்பம் மறுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் எம்.என். நௌபீஸ் என்பவரே, இவ்வாறு றிஸ்வானுக்கான சர்ந்தர்ப்பத்தை இல்லாமல் செய்துள்ளதாக தெரியவருகிறது.

கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சு அண்மையில் நடத்திய, மாகாண விளையாட்டுப் போட்டியில் 110 மீற்றர் தடை தாண்டல் ஓட்டம், 4X100 மீற்றர் மற்றும் 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில், அம்பாறை மாவட்டம் சார்பாகப் பங்குபற்றிய றிஸ்வான் எனும் இளைஞர், அவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

அதேவேளை, 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் குறைந்தளவு நேரத்தில் ஓடிய றிஸ்வான் குழுவினர், கிழக்கு மாகாண மட்டத்தில் புதிய சாதனையொன்றினையும் படைத்திருந்தனர். 4X400 மீற்றர் அஞ்சலோட்டத்தை முன்னர் 03:31:01 நிமிடங்களில் ஓடிக் கடந்த சாதனையை, இம்முறை றிஸ்வான் குழுவினர் 03:30:00 நிமிடங்களில் ஓடிக் கடந்து புதிய சாதனையொன்றை நிலை நாட்டினர்.

ஆயினும், பதுளையில் இம்மாதம் நடைபெறவுள்ள 45ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில், கிழக்கு மாகாணம் சார்பாக கலந்து கொள்ளவுள்ள 4X400 மீற்றர் அஞ்சலோட்டக் குழுவில், றிஸ்வான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றும், இது அவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி எனவும் றிஸ்வான் தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளவர்களின் பெயர்ப்பட்டிலை கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் தயாரித்துள்ள நிலையிலேயே, 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிக் குழுவில் தனது பெயர் இடம்பெறவில்லை என றிஸ்வான் கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவிலும் 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கலந்து கொண்ட றிஸ்வான் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில், கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளாதவர்களின் பெயர்களை, 4X400 மீற்றர் அஞ்சலோட்டக் குழுவில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் இணைத்துள்ளதாக, றிஸ்வானின் கழகத் தலைவரும், ஊடகவியலாளருமான எஸ்.எம். அறூஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, பிரதேச மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் 4X400 அஞ்சலோட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ள றிஸ்வானுக்கு, தேசிய விளையாட்டு விழாவிலும் 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்ற றிஸ்வான்: பெருமை கொள்கிறது அட்டாளைச்சேனை

Comments