500 மில்லியன் ரூபாவில் கல்முனை மாநகர சபைக்கு கட்டடம்: ஒப்பந்தம் கைச்சாத்து

🕔 September 26, 2019

வீன முறையில் அமைக்கப்படவுள்ள சகல வசதிகளையும் உள்ளடக்கிய கல்முனை மாநகர மண்டபத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய இன்று வியாழக்கிழமை நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் முன்னிலையில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையில், கல்முனை மாநகர மேயர் ஏ.எல்.எம். றகீப், மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், தேசிய கட்டிடங்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் சார்பில் மேலதிக செயலாளர் எம்.எச்.எம். நபீல் ஆகியோர் கைச்சாத்திட்டனர்

500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆறு மாடிகளைக் கொண்ட இப்புதிய மாநகர மண்டபம் 5,950 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இதன் நிர்மாணப் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது. அதில் நகரசபை நிர்வாக அலுவலகம், சபா மண்டபம், கேட்போர் கூடம், விசாலமான வாகன தரிப்பிடம், பல் சேவை நிலையங்கள் என்பன அமைக்கப்படவுள்ளன.

தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் மாநகரசபை பணிமனை கட்டிடம் முழுதாக அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிய மாநகர மண்டபம் அமைக்கப்படவுள்ளது. அதன் நிரமாணப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், இணைப்புச் செயலாளரும் மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர், நகர திட்டமிடல் பிரிவின் உயரதிகாரிகள் மற்றும் கல்முனை மாநகர சபை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, சீனாவின் நகர திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கல்முனை நகரை நவீனமயப்படுத்தும் திட்ட வரைபு தொடர்பான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

சீனா – இலங்கை நட்புறவை வலுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு சீனாவின் உதவி மற்றும் இலகு கடன் திட்டத்தின் மூலம் இதற்கான நிதியைப் பெற வழியேற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments