சஜித் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அந்த நெருப்பு அணைந்து விட்டதா?
🕔 September 26, 2019
– மப்றூக் –
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, சஜித் பிரேமதாஸவை எதிர்ப்பின்றித் தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து ‘அன்னம்’ சின்னத்தில் கூட்டணியமைத்து, ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கூட்டணியின் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசமே செயற்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளமையை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர், சஜித் மற்றும் அவரின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து கட்டை விரல் உயர்த்திக் காட்டி, மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
ஹக்கீம் மற்றும் றிசாட் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரையே ஆதரிப்பார்கள் என்பதை சாதாரண பொதுமக்களே நீண்ட நாட்களுக்கு முன்னர் ஊகித்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தார்கள். இந்த நிலையிலேயே, மேற்படி இருவரும் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், சஜித் பிரேமதாஸவை கட்சிக்குள் நேரடியாக எதிர்த்து கருத்துகளைக் கூறி வந்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் சரத் பொன்சேகா போன்றோர், சஜித்தின் வெற்றிக்காக களத்தில் இறங்கி, நேர்மையாக வேலை செய்வார்களா என்கிற கேள்விகள் பாமர வாக்காளர்களிடமே உள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்பட்டவுடன் ஐ.தே.கட்சிக்குள் எரிந்து கொண்டிருந்த தீ அணைந்து விட்டதாக யாரும் நினைத்தால் அது அப்பாவித்தனமாகவே இருக்கும்.
அந்த நெருப்பு – நீறு பூத்த தணலாக, ஐ.தே.கட்சிக்குள் புகைந்து கொண்டுதான் இருக்கப் போகிறது.
அந்தத் தணல், பற்றி எரிந்தாலும் ஆபத்து; அப்படியே இருப்பதும் ஆபத்தானதாகும்.
நீர் ஊற்றி அந்த நெருப்பை அணைத்தால் மட்டுமே, இறுதி இலக்கு வரை சஜித் பிரேமதாஸவினால் ஓட முடியும்.
இல்லா விட்டால், இடையில் குப்புற விழுந்து, மூக்குடைபட வேண்டிய நிலை அவருக்கு ஏற்படலாம்.