தலைப்புச் செய்திகள்

ஆட்சி மாறினால், நாங்களும் காணாமல் போகலாம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கல்முனையில் அச்சம் தெரிவிப்பு

– பாறுக் ஷிஹான் –

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை  கல்முனையில் பாரிய பேரணி முன்னெடுத்தனர்.

கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி, கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை உப பிரதேச செயலகம் வரை சென்று, அங்கு மகஜர் கையளிக்கப்பட்டது.

கல்முனை உப பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜெ. அதிசயராஜ் மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன்  ஆகியோரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை  சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின்  பிரதிநிதிகள், உறவினர்கள்  பல்கலைக்கழக மாணவர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

“10 வருடங்களாக போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றோம். இதுவரை 35 பேருக்கு மேல் எம்மோடு இணைந்து தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் என்கிற எதிர்பார்போடு உயிரை விட்டுள்ளார்கள்”.

“நாம் அரசாங்கத்திடம் மகஜர் கையளித்தோம், பல போராட்டங்களை முன்னேடுத்தோம். எதற்கும் அரசாங்கம் செவிசாய்ப்பதாக இல்லை. அரசாங்கம் மூலம் எமக்கான நீதி கிடைக்கவில்லை”. 

“நாம் வீதிகளில் நின்று கத்தும் ஒலி சர்வதேசத்திற்கு கேக்கவில்லையா? ஆட்சி மாற்றம் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. அப்படி நடந்தால் நாங்கள் கூட காணாமல் போகலாம். அரசாங்கம் மாறுவதற்கு முதல் சர்வதேசம் கவனத்தில் கொண்டு எங்களுடைய உறவுகளை மீட்டுத்தர முயற்சி செய்ய வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும்” என்று, பேரணியில் கலந்து கொண்டேர் தெரிவித்தனர்.

வெள்ளை வேனில் கொண்டு சென்றவர்கள் எங்கே? பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்  சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய்  கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே? கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே?  எம் உறவுகளை கொலை செய்தவர்கள் கடத்திய பதவியை வழங்குவதுதான் நல்லாட்சியா? போன்ற வாசகங்களை அடங்கிய பதாதைகளை பேரணியில் கலந்து கொண்டோர், கையில் தாங்கியிருந்தனர்.