இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு

🕔 July 8, 2019

லங்கை சிங்களவர்களின் நாடு என்று பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதற்காக தமிழர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கை உலமா சபை 04 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க நாம் செயற்பட வேண்டும்.

இது சிங்களவர்களின் நாடு. இதனைக் கூறுவதால் தமிழர்கள் இதனால் கோபிக்க கூடாது. எல்லாவற்றுக்கும்போல நாட்டுக்கு ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள் தான் வரலாறு கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும் நாங்கள் கௌரவமான இனம்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இவ்வருடம் இதுவரை 08ஆயிரம் பேர் வரை உலகில் கொல்லப்பட்டுள்ளனர்.

உலமா சபைக்கு இன்று பயங்கரவாதத்துடன் தொடர்பு உள்ளது. அவர்கள் இந்தோனேசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளனர்.

இங்கே 40 வகையான மொழிபெயர்ப்புக்களுடன் குரான் உள்ளது.1950 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு குர்ஆன் உள்ளது. அந்த குர்ஆன் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

உலமாக்கள் இங்கு வெளியேறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இப்படியே சென்றால் நீங்கள் இங்கு இருக்க முடியாது. உலமாக்களின் கொஞ்சம் ஓட்டுக்களுக்காக எமது அரசியல்வாதிகள் அலைகின்றனர்

சிங்கள அரசை அமைப்போம். சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம். நாடாளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம். சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருக்க வேண்டும்.

இன்று சிங்களவர்கள் சிங்களவர்களாக இருக்கவைக்க எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காக பாடுபட வேண்டும்” என்றார்.

Comments