தென்கிழக்குப் பல்கலையின் பொருளியல் நிபுணர் ‘காலம்’ ஆனார்

🕔 June 19, 2019

– கலாநிதி எம்.எம். பாஸில் (தலைவர், அரசியல் விஞ்ஞானத் துறை, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)

(சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எம். அஹமது லெப்பையின் நினைவுக் கூட்டம், இன்று புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதன்போது கலாநிதி பாஸில் ஆற்றும் சொற்பொழிவின் எழுத்து வடிவம் இது)

‘ஒரு கல்வியியலாளனின் வாழ்க்கை சந்தோஷம், துக்கம், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு கடினமான பாதையாகும். அவன் இழப்புக்களை சந்தித்திருக்காவிட்டால் நடைமுறையில் இருக்கும் அறிவுத் தொகுதிக்கு எந்த பங்களிப்பும் செய்திருக்கமாட்டான்.

– றமீஸ் அப்துல்லாஹ் –

ம்பத்து ஒன்பதாவது வயதில் அந்தப் பொருளியல் நிபுணர் எம்மை விட்டும் பிரிந்து விட்டார். ஆனால்,அவர் பிறந்த மண்ணும் மக்களும் பணிபுரிந்த பல்கலைக்கழக சமூகமும் அவரை எப்போதும் உன்னத மனிதராக மதிக்கின்றன. அழகான தோற்றமும் சாந்தமான முகமும் குர்ஆனைச் சுமந்த உள்ளமும் கொண்ட அந்த மனிதர் தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகும். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறைத்தலைவர், சம்மாந்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி, அல் ஷாபிழ் எஸ்.எம்.அஹமது லெப்பை அவர்கள் 02.05.2019 அன்று இறையடியெய்திய செய்தி நெஞ்சை விட்டும் அகலாத துன்பமாய் நம்மைத் துவழச் செய்கின்றது.

இந்த நாட்கள் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை குறிப்பாக தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்துக்கு துக்ககரமான நாட்களாகும். ஏனெனில், இவர்கள் இரண்டு முக்கிய இழப்புக்களை சந்தித்திருக்கின்றனர். அதில் ஒன்று, உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலால் தாம் சார்ந்த சமூகத்தின் நற்பெயர் இழக்கப்பட்டிருப்பது. அடுத்தது, முஸ்லிம் சமூகவியலாளர்களுள் ஒருவரான எதிர்கால பொருளியல் துறை பேராசிரியர் பதவிக்கு தகுதியானவர் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட அஹமட் லெப்பையின் மரணச் செய்தியாகும். இவரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நாங்கள் அனைத்தையும் நோக்க வேண்டியுள்ளது. முதலில் இது சோதனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்க அல்லாஹ்வின் நாட்டம் வேறொன்றாக இருக்கும். எனவே,நாம் அல்லாஹ்வின் தீர்ப்பை, அவனது நாட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுஈமானின் அடிப்படை அம்சம். ஈமானை பரிசோதிக்கின்ற சந்தர்ப்பம் இது. நோயும் மரணமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வருகின்றன. இத்தகைய சோதனைகளின் போது பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். இது பற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

‘விசுவாசிகளே! பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும் செல்வங்கள், உயிர்கள், கனிகளின் விளைச்சல்கள் ஆகியவற்றின் குறைவைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம். பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாரயம் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது,’நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள்’ (ஸுரதுல் பகரா: 155-156).

நாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவர்கள்; அவனிடமே மீளச் செல்பவர்கள்; அவனுக்காகவே வாழ்பவர்கள் என்ற உண்மையை உணர வேண்டிய சந்தர்ப்பம் இது.

இத்தகைய சோதனைகளின் போது பொறுமையைக் கைக்கொள்பவர்களுக்கு நன்மாராயம் கூறுமாறு அல்லாஹ் குறிப்பிடுகின்றான். பொறுமையாக இருப்பது முஃமின்களின் பண்பு. அவர்கள் சோதனைகளின்போது பொறுமை காப்பார்கள். அகமட் லெப்பையின் விடயத்திலும் இவ்வாறான பொறுமையை கடைப்பிடிப்பது அவசியமானதாகும். அவர் எங்களை விட்டு பிரிந்து சென்றாலும் கல்வியியல் ரீதியாகவும் ஆய்வியல் ரீதியாகவும் தான் சார்ந்திருந்த பொருளியல் துறைக்கும் அவர் கடமை புரிந்த பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை சமூகத்திற்கும் விலைமதிக்க முடியாத பங்களிப்பை செய்திருக்கிறார். அவை பற்றி நோக்குவோம்:

கல்விப் பணிகள்

இவர் பாடசாலை ஆசிரியராக, பிரத்தியேக வகுப்பு வளவாளராக மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளராக கல்வித் துறைக்கு அரும்பணியாற்றிய பெரும்தகையாவார். 1990களில் தென்கிழக்குப் பிரதேசத்தில் பொருளியல் கற்பித்தலில் ‘புயல்’ என பெயரும் புகழும் பெற்றவராவார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்பு இளங் கலைமாணி பட்டத்தையும் அதே பல்கலைக்கழகத்தில் முது தத்துவமாணிப் பட்டத்தையும் பேராசிரியர் மு. சின்னத்தம்பி முதலானோர்களின் வழிகாட்டலில் பெற்றுக்கொண்ட இவர்,சென்னை பல்கலைக்கழத்தின் பேராசிரியரும் தமிழ் நாட்டு அரசின் பொருளியல் ஆலோசகருமான ஜோதி சிவஞானத்தின் மேற்பார்வையில் கலாநிதிப் பட்டப்படிப்பையும் மேற்கொண்டார்.

பாடசாலை ஆசிரியராக இருக்கின்ற காலத்திலே உயர் கல்வித்துறையில் பொருளியல் கற்பித்தலில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற இவர், சம்மாந்துறை இணைந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகி, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து விரிவுரையாளராகவும் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பதவி உயர்வு பெற்று, சமூக விஞ்ஞானத்துறை தலைவராகவும் கடமையாற்றி,பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையில் தலைவராக பணிபுரியும் பேறுபெற்றிருந்தார். கலைப் பீடத்தின் பதில் பீடாதிபதியாக கடமை புரிந்தார் என்பது சிறப்புக்குரியதாகும்.

இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளராக 05 வருடங்களாக கடமையாற்றினார். இக்காலப் பகுதியில் பல கருத்திட்டங்களை எழுதி, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்து, அதனூடாக பல மில்லியன் ரூபாய்களை பெற்று வந்து பணியாளர் அபிவிருத்தி நிலையத்தினை புனர்நிர்மாணம் செய்தார். அத்துடன் கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கான பல நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்கி அதனூடாக புதிய பல கற்கைநெறிகளை அறிமுகப்படுத்தினார். மேலும் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்படும் விரிவுரையாளர்களுக்கான Induction Programme எனும் பயிற்சி நெறியினை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைத்த பெருமை இவரையே சாரும்.

இவற்றுக்கு அப்பால் இவர் பல்கலைக்கழகத்தின் உயர் சபையாகிய Council பிரதிநிதியாகவும் Senate பிரதிநிதியாகவும் பல வருடங்கள் பதவி வகித்தார். மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கை நிலைநாட்டும் பதவியான Proctor எனும் பதவியையும் உதவி Proctor எனும் பதவியையும் பல தடவைகள் பொறுப்பேற்று பணிபுரிந்தார்.

மேலும் மாணவ ஆலோசகர், ஆசிரியர் சங்க உப செயலாளர்மேலும் மாணவ பேரவைகளின் பெரும் பொருளாளர் போன்ற பதவிகளை வகித்தார் என்பது இவரது சிறப்பம்சமாகும்.

ஆய்வுகளும் வெளியீடுகளும்

உயர்தர மாணவர்கள், பல்கலைக்கழக உள்வாரி,வெளிவாரி மாணவர்கள் போன்றவர்களின் கற்றல் செயற்பாட்டை இலகுபடுத்துவதற்காக ஐந்திற்கும்மேற்பட்ட text புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒன்று இன்று இந்த நிகழ்வில் வெளியிடப்படுகின்றது.

குறிப்பாக 05-10 ஆய்வுச் சஞ்சிகைகளில் தமது ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அதில் சிலாகித்துக் கூற வேண்டிய விடயம்; யாதெனில், உபவேந்தர் பேராசிரியர் நாஜிமின் ‘மறுமலர்ச்சி புரட்சியின்’ தாக்கத்திற்கு அகப்பட்ட அஹமட், சர்வதேச குறியீட்டு இதழில் (Index Journal) தனது கட்டுரையினை வெளியிட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொருளியல்துறை விரிவுரையாளர் எனும் கௌரவத்தினைப் பெறுகிறார்.

அவரது ஆய்வுக்கட்டுரை ஒன்றில் இலங்கையில் பெண் மாணவிகளின் உயர் கல்வி நிறுவனங்களுக்கான அதிகரித்துவரும் நுழைவு குறித்து விமர்சன ரீதியாக அணுகப்பட்டிருக்கின்ற விதம் நடைமுறையிலிருக்கும் ஆய்வுத்தொகுதிக்கு மிக முக்கியமான புதிய பங்களிப்பாக கல்விச் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நண்பர் பௌசர் அவர்கள் அஹமட்டின் பேராசிரியர் பதவிக்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்துவிட்டதாக அவரிடம் கூறினார். “Sir, இப்போது நீங்கள் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்” என்று கூறினார். அந்த சந்தோஷச் செய்தியை அஹமட் கேட்டதன் பின்னரே மரணமடைந்தார்.

பொருளியலாளர்களை உருவாக்கல்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் தனது உன்னதமான பணிகளினூடே மிக ஆழமாக கால்பதித்து பல பொருளியலாளர்களை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றார். அவரது முதலாவது மாணவனான முஸ்தபா சிரேஷ்ட விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்று கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவராக பதவி வகிக்கும் முஸ்தபா, தமது ஆசிரியரான அஹமட்டின் நினைவு தினத்தினை ஏற்பாடு செய்வதில் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றார்.

மேலும், தன்னிடம் கல்வி கற்று முதல் தரத்தில் சித்திபெற்ற 03 பெண் மாணவிகளை தனது பாசறையில் வளர்த்ததோடு மாத்திரமல்லாது அவர்கள் மூவரையும் தனது துறையின் நிரந்தர விரிவுரையாளர்களாக நியமிப்பதில் பெரும் பங்காற்றினார். அவர்களின் உயர்வினை தன் கண்களால் பார்த்து அச்சந்தோஷத்தினை அனுபவித்த பின்னரே மரணமடைந்திருக்கிறார்.

இவ்வாறான நிகழ்வுகள் அஹமட் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தேவையான பொருளியலாளர்களை உருவாக்க முயற்சித்திருக்கின்றார் என்பதற்கான சான்றுகளாகும்.

தேசிய பொருளாதாரத்திற்கான பங்களிப்பு

உயர்தர மாணவர்களின் இறுதிப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரித்தல், அவற்றை பரீட்சித்தல் போன்றவற்றில் நீண்ட காலம் பிரதம பரீட்சகராக கடமை புரிந்தார்.

அவரது அந்திம காலத்தில் போருக்குப் பிந்திய அபிவிருத்திச் செயன்முறையில் முக்கிய பங்காற்றினார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பொருளியல் நிபுணர்கள் பல தடவைகள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் அஹமட்டிற்கும் முக்கிய இடம் கிடைத்திருந்தது. அந்நிகழ்வுகளில் அஹமட் தொடர்ச்சியாக பங்குபற்றி, ஜனாதிபதியின் அபிவிருத்திக் குழுவிற்கு தனது ஆலோசனைகளையும் நிபுணத்துவ பங்களிப்புக்களையும் செய்திருந்தார். எனவே, அந்த பொருளியல் நிபுணரின் இறப்பு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்லாது இந்த நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் உருவாக்கம் தங்களுக்கென புதியதோர் திணைக்களத்தை உருவாக்குவதில் அஹமட் மற்றும் கலாநிதி நுபைல் ஆகியோர் அதிக அக்கறை காட்டினர். இவர்களது அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட இத்துறைக்கு அஹமட் 03 வருடங்கள் தலைமை வகித்து, எல்லா வகையிலும் அத்துறையினை வளர்ச்சியடையச் செய்திருக்கிறார். அதற்குரிய ஆளணி, பௌதீக வளம் போன்ற அனைத்தையும் பல்கலைக்கழக நிருவாகத்திடம் இருந்து பெற்று சிறந்த துறையாக வளரச்செய்துவிட்டே மரணித்தார்.

குடும்பம்

மூன்று பெண்பிள்ளைகளின் தந்தையாகிய இவர் தனது பிள்ளைகளுடனும் மனைவியுடனும் அதீத பாசமாக இருந்தார். மிகக் கடுமையாக நோயுற்று உள்ள தருணங்களில் அவரது மனைவி அவரை விட்டு பிரியாது மிக அன்பாக பார்த்துக்கொண்டார். என்னைப் பொறுத்த வரைக்கும் அஹமட் லெப்பை அவர்கள் இரண்டு வகையான சொர்க்கங்களை அனுபவிப்பதற்கு அல்லாஹ் வாய்ப்பளித்திருக்கிறான்.அதில் ஒன்று இவருக்கு கிடைத்த மனைவியாகும். இந்த உலகில் நான் மதிக்கும் பெண்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக எனது அன்பு நண்பனின் மனைவி சல்மா அவர்கள் திகழ்கின்றார்கள். நீண்ட காலம் நோயுற்ற அஹமட் லெப்பை அவர்களை இரவு பகலாக சலித்துக் கொள்ளாமல் முழு வீச்சுடன் அரவணைத்தார். ஒரு மனைவியால் கணவருக்கு செய்யவேண்டிய அனைத்து கடமைகளையும் செவ்வனே செய்துவந்தார்.

அஹமட்டின் கல்விப் பணியினை அல்லாஹ் பொருந்திக் கொண்டிருக்கின்றான் என்பதற்கு அவரின் குழந்தைகள் அடைந்திருக்கக்கூடிய உயர் தகைமைகள்சான்றாக அமைந்திருக்கின்றன. அதன் பிரகாரம் அவரின் மூத்த மகள் ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கற்றுக்கொண்டிருக்கின்றார். இரண்டாம் மகள் மாவனல்லை ஆயிஷா சித்தீக்கா எனும் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலுகின்றார். அவரின் மூன்றாவது மகள் தரம் ஐந்து புலமை பரிசிலில் சித்தியடைந்து பாடசாலைக் கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

அஹமட் அவர்கள் நண்பர்களால் நேசிக்கப்பட்டார். அந்த நண்பர்கள் அவரை எல்லையற்று நேசித்தனர். கல்வித்துறையில் நீண்ட பயணம் மேற்கொண்டிருந்த அஹமட்அவர்களுக்கு மிக நெருக்கமான சில நண்பர்கள் இருக்கின்றார்கள். அவரின் சுக துக்கங்கள் அனைத்திலும் அவர்கள் பங்கெடுக்கின்றார்கள் என்பது கண்கூடு.

அஹமட்டுடன் கழிந்த அந்த இறுதி சில மணித்தியாலயங்கள்

அஹமட்டுடன் கழிந்த அந்த இறுதி சில மணித்தியாலயங்கள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத பதிவுகளை ஏற்படுத்தியுள்ளன. மே மாதம் 2ம் திகதி காலை சுபஹ் தொழுகையின் பிற்பாடு என்னுடன் தொலைபேசி அழைப்பு ஒன்றினூடாக அஹமட் இரண்டு நிமிடங்கள் பேசினார். எனது வீட்டுக்கு வரமுடியுமா என்று கேட்டார். கடந்த ஆறு மாத காலமாக ஒவ்வொரு மாதத்திலும் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் எனக்கு உடலுக்கு முடியாது என்றும் இன்ன இன்ன வேலைகளை முடித்து தரும்படியும் கேட்பது அவரது வழக்கம். காலை 9.30 மணியளவில் என் வீட்டிலிருந்து புறப்பட்ட நான், சரியாக 9.45 மணியளவில் அவரை சென்றடைந்தேன். கல்முனைக்குச் சென்று ஒரு வேலையை முடித்து வரும்படி என்னிடம் கூறினார்.

செல்லும் வழியில் நண்பர் றமீஸ் அபூபக்கர் அவர்களையும் அழைத்துக்கொண்டு கல்முனையிலிருந்து மீண்டும் சம்மாந்துறையை நோக்கி பயணித்தோம். வரும் வழியில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து அஹமட் அவர்களின் வீட்டுக்கு வந்து சேருங்கள். அவரை சந்தித்து விட்டு பல்கலைக்கழகத்திற்கு செல்வோம் என்று அன்பாக கேட்டுக்கொண்டோம். நானும் றமீஸ் அபூபக்கரும் அஹமட்லெப்பை வீட்டைச் சென்றடைந்த போது றமீஸ் அப்துல்லாஹ்வும் அஹமட்லெப்பையும் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டோம்.

அன்று மாலை 03 மணிக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த இருதய நோய் நிபுணர் ஒருவரை சந்திக்க செல்லவிருப்பதாக எங்களிடம் கூறினார். நேரம் காலை 11.30 தாண்டிய வேளை நிழல் பிரதி ஒன்றை எடுப்பதற்காக நானும் பேராசிரியரும் வெளியில் சென்று அஹமட்லெப்பையின் வீட்டுக்கு திரும்பினோம். அப்போது தனக்கு முடியாமல் இருப்பதாகக் கூறி விட்டு சிறிது ஓய்வு எடுத்து விட்டு வருகின்றேன் என உள்ளே சென்றார். மீண்டும் எங்களிடம் வந்த போது ழுஹர் தொழுகைக்கான அதான் ஒலித்தது. அதானுக்கு பதில் சொன்னவராக எங்களோடு அன்பாகப் பேசிக் கொண்டிருந்தவாறே இவ் உலகை விட்டு பிரிந்தார்.

முடிவுரை

பொருளியல் நிபுணரான நண்பன் அஹமட்டின் வாழ்க்கை சந்தோசம் துக்கம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த ஒரு கடினமான பயணமாகக் காணப்பட்டது. அவரதுகல்வி, ஆய்வு, பொருளியலாளர்களை உருவாக்கல், தேசிய பொருளாதாரத்திற்கான பங்களிப்பு, பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையினை நிறுவுவதற்கான முயற்சி போன்றவற்றினூடாக அவர்; இறந்த பின்னும் ஒரு கல்வியியலாளன் என்ற பின்னணியில் இன்னும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

நேற்று வரை எம்மோடு இருந்தாய்
எங்களில் ஒருவனாய் எம்மோடு வாழ்ந்தாய்
காலமெல்லாம் எமை மகிழ்விப்பாய் என்றிருக்க
கண்ணீரைத் தந்து விட்டு விண்ணோடு நீ போனாய்
ஆற்றொண்ணாத் துயரமது ஊற்றாகி ஓடுதையா
நீசுவனம் செல்ல வேண்டுகிறோம்.

– உன் நினைவால் வாடும் நண்பர்கள் –

Comments

புதிது பேஸ்புக் பக்கம்