மினுவாங்கொட தாக்குலின் பின்னணியில், சில அரசியல்வாதிகளே இருந்தனர்: பௌத்த தேரர் தெரிவிப்பு

🕔 May 20, 2019

– அஸ்ரப் ஏ சமத் –

மினுவாங்கொட நகரில் கடந்த வாரம் நடைபெற்ற  அசம்பாவிதங்களுக்கு பின்னால் இனக்குரோதம் கொண்ட சில அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்று மினுவான்கொட தர்மராம இந்துல உடக்கந்த ஜானந்த தேரர் தெரிவித்தார்.

மினுவாங்கொட நகர ஜூம்ஆப் பள்ளிவாசலில் சர்வமத தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது மீண்டும் சக வாழ்வினை ஏற்படுத்தும் முகமாக ஊடக சந்திப்பு ஒன்றினையும் அங்கு நடத்தினர். இவ் ஊடக சந்திப்பினை சிரேஸ்ட ஊடகவியலாளா் எம்.ஏ. நிலாம் மற்றும் வர்த்தகா் கபீர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயத்தை தேரர் கூறினார்.

கிறிஸ்ததவ மதகுரு அருட்தந்தை நதிர பெர்ணான்டோ, இந்து மதகுரு சிவஸ்ரீ  குமார சர்மா குருக்கள் மற்றும் மினுவான்கொட ஜம்ஆப் பள்ளிவாசல் பிரதம இமாம்  எம்.எஸ்.எம். நஜீம் ஆகியோரும் அங்கு உரையாற்றினாா்கள். 

அங்கு தொடர்ந்து பேசிய இந்துல உடக்கந்த ஜானந்த தேரர்; 

“இனக் குரோதம் கொண்ட அரசியல்வாதிகளின் எண்ணங்களுக்கு நாம் மீண்டும் பலியாகாமல் ஐக்கியமாக நமது சாதாரண வாழ்வினை நாம் ஆரம்பிப்போம். 

பராம்பரியம் தொட்டு நாம் மிகவும் அன்னியோன்னியமாகவும் சௌஜன்யமாகவும் வாழ்ந்து வந்தோம்” என்றார்.

பிரதம இமாம்  மௌலவி நஜீம் அங்கு உரையாற்றுகையில்; “பாதிக்கப்பட்ட மக்களின் வியாபாரங்களை மீள ஆரம்பிப்பதற்கும் இழந்த சொத்துக்களுக்கும் அரசாங்கம் முன்வந்து நஷ்டஈட்டினை வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

Comments