தாக்குதல்களை நடத்த, இலங்கையை ஐ.எஸ் அமைப்பு தெரிவு செய்திருக்கவில்லை: அமெரிக்க நிபுணர் தெரிவிப்பு

🕔 May 20, 2019

குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் இயக்கம் இலங்கையைத் தெரிவு செய்திருக்கவில்லை. மாறாக இலங்கையைச் சேர்ந்த குழுவொன்று தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் இயக்கத்தைத் தெரிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது என, அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனுக்காகப் பணியாற்றும் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ஜோனா பிளான்க் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கார்டியன் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியரான நிலாந்த இலங்கமுவ என்பவருக்கு நேர்காணலொன்றை வழங்கியிருக்கும் ஜோனா பிளான்க்; “ஐ.எஸ் இயக்கத்தை இலங்கைத் தீவிரவாதிகள் குழு தெரிவு செய்ததைப் போன்று உலகின் வேறு பகுதிகளிலும் கூட நடந்திருக்க முடியும். ஆனால் இங்கு அவ்வாறு செய்தவர்கள் இலங்கையர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தங்களது பயிற்சிகளையும், உபகரணங்களையும் ஐ.எஸ் இடமிருந்து பெற்றிருக்கின்றார்கள்” என்று கூறியுள்ளார்.

“இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளிப்படையாகவே தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்கின்றார்கள். பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவர்களால் ஒத்துழைத்துச் செயற்பட முடியாது” என்றும் அமெரிக்க நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ் அமைப்பின் இலங்கைக் கிளையினர் என்று கூறப்படுகின்றவர்களால் கத்தோலிக்க தேவாலயங்களிலும், ஆடம்பர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் குறித்து உங்களது அபிப்பிராயம் என்னவென்று ஜோனா பிளான்கிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில்;

“இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் கொடூரமானவை. அவை முற்றிலும் எதிர்பார்க்கப்படாத தாக்குதல்களாகும். இலங்கை கொடூரமான உள்நாட்டுப் போருக்குத் தாக்குப்பிடித்த நாடு. அந்தப் போர் பெருமளவிற்குப் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் அந்தப் போரின் போது, இப்போது நடைபெற்றிருப்பதைப் போன்ற தாக்குதல்கள் ஒருபோதும் நடைபெறவில்லை”.

“அதாவது இலங்கை கடந்த காலத்தில் அனுபவித்த பயங்கரவாதம் பெரும்பாலும் அரசியலையும், இனத்துவ அடையாளத்தையும் அடிப்படையாகக் கொண்டதே தவிர, மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. கிறிஸ்தவர்கள் அவர்களது மத நம்பிக்கைக்காக ஒருபோதும் முன்னர் இலக்கு வைக்கப்பட்டதில்லை. ஐ.எஸ் போன்ற சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள் முன்னொருபோதும் இலங்கையில் தீவிரமாக இயங்கியதில்லை” என்று கூறினார்.

இலங்கையை அவர்கள் ஏன் தெரிவு செய்தார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க நிபுணர்; 

“இலங்கையை ஐ.எஸ் இயக்கம் தெரிவு செய்யவில்லை. இலங்கைக் குழுவொன்று தங்களது நோக்கங்களுக்காக ஐ.எஸ் இயக்கத்தைத் தெரிவு செய்து உதவிக்கு நாடினார்கள்” என்று கூறியுள்ளார்.

கேள்வி: 2009 ஆம் ஆண்டில் முடிவடைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்கிளர்ச்சிக்கும், இலங்கையில் தங்போது காணப்படும் ஜிஹாத் தீவிரவாத அச்சுறுத்தலுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?

பதில்: இரண்டும் தொடர்புபட்டவை அல்ல.

விடுதலைப் புலிகள் அவ்வப்போது முஸ்லிம்களையும் இலக்குவைத்துத் தாக்கினார்கள். ஆனால் கோட்பாட்டு ரீதியான காரணங்களுக்காக அல்ல. அரசியல் காரணங்களுக்காகவே அவ்வாறு முஸ்லிம்களைத் தாக்கினார்கள். அதாவது புலிகளின் நோக்கங்களுக்கு உதவுவதற்கு முஸ்லிம்கள் மறுத்த போது இந்தத் தாக்குதல்கள் நடந்தன.

பயங்கரவாத அச்சுறுத்தலின் தாக்கம் என்று நோக்கும் போது எந்தவொரு இஸ்லாமியக் குழுவினாலும் தோற்றுவிக்கப்படக் கூடிய அச்சுறுத்தலை விடவும், 2009 வரை விடுதலைப் புலிகள் தோற்றுவித்த அச்சுறுத்தல்கள் மிக மிகப் பாரியவை. ஆனால் அர்ப்பணிப்புக் கொண்ட சிறிய பயங்கரவாதிகள் குழுவினால் எந்தளவிற்கு சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் காட்டுகின்றன.

கேள்வி: முற்றிலும் புலனாய்வுத் தவறுகளே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறுவதற்குக் காரணமென்று பலர் வாதிடுகின்றார்கள். ஆனால் புலனாய்வு நிறுவனங்களின் எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்படாமல் போயிருப்பதை எம்மால் காணமுடிகின்றது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் : சம்பவம் நடந்த பிறகு இவ்வாறாகச் சிந்திப்பது எப்போதுமே சுலபமானது. ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் உகந்த முறையில் செயற்படத் தவறியதன் விளைவான அரசியல் தவறே அனர்த்தம் நேர்ந்ததற்குக் காரணம் போல் தெரிகிறது. வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனம் ஒன்றிடமிருந்து (பெரும்பாலும் இந்தியாவிலிருந்து) எச்சரிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த எச்சரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது. அந்தப் புலனாய்வுத் தகவல்கள் பிரதமர் விக்கிரமசிங்கவிற்கும் தெரியப்படுத்தப்படவில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, பிரதமரை ஜனாதிபதி நம்புகிறார் இல்லை. அவர்களுக்கிடையில் உறவு முறிந்து போயிருக்கிறது. 2018 ஒக்டோபரில் பிரதமரைப் பதவி கவிழ்க்க ஜனாதிபதி முயற்சித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மற்றையது, தனக்கு மேலாக பிரதமரை இந்தியா விரும்புகிறது என்று ஜனாதிபதி நம்புகின்றார். அதனால் இந்தியத் தரப்பிடமிருந்து வந்த புலனாய்வுத் தகவல்களை அவர் கணக்கெடுக்காமல் விட்டிருக்கக்கூடும்.

கேள்வி: எதிர்காலத்தில் இத்தகைய குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு உங்களிடம் யோசனைகள் ஏதாவது இருக்கின்றதா?

பதில்: இலங்கைக்கு என்னிடம் சில யோசனைகள் இருக்கின்றன. முதலாவது, ஜனாதிபதியும் பிரதமரும் தங்களுக்கிடையிலான அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும். நாட்டின் இரு உயர் தலைவர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்கும் போது அவர்களால் தங்களின் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைக்க முடியாது, அவசியமானால் புதிய தேர்தல்களை நடத்தலாம். அல்லது ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு வழிவகைகளைக் காணவேண்டும்.

இரண்டாவதாக, பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் புலனாய்வுத் தகவலைப் பகிர்ந்துகொள்வதில்  ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும். இத்தடவை இந்தியாவின் புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியாவிடம் பெருமளவு தகவல்கள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய நாடுகளாலும் கூட அவ்வாறு புலனாய்வுத் தகவல்களை வழங்க முடியும்.

மூன்றாவதாக, இலங்கை முஸ்லிம் சமூகத்துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சித் தடுப்பு விவகாரங்களில் இலங்கையின் கடந்தகால நடவடிக்கைகள் நல்லவையாக இல்லை.

கொடுமையான நடவடிக்கைகளின் ஊடாகத் தமிழ் மக்களை அரசாங்கம் அந்நியப்படுத்தியது. அந்த அந்நியப்படுத்தலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவைப் பெருக்கி அவர்களை வலுப்படுத்தியது.

இலங்கை அரசாங்கம் அதே தவறை முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் இழைக்கக் கூடாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்