நியூஸிலாந்து தாக்குதலைக் கண்டித்து, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; தீர்மானமும் நிறைவேற்றம்

🕔 March 21, 2019

– எம்.எஸ்.எம். நூர்தீன் –

நியூஸிலாந்து பள்ளிவாசலில் முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதுடன், நகர சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து சபை அமர்விலும் கலந்து கொண்டனர்.

நியூஸிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிசவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில், 50 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, காத்தான்குடி நகர சபை அமர்வு இன்று காலை ஆரம்பிப்பதற்கு முன்னர், சபையின் தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் தலைமையில் சபை உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து, நகர சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலுக்கு எதிராக தாம் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாகவ இதன் போது நகர சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சபை அமர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. சபை உறுப்பினர்கள் அனைவரும் நியூஸிலாந்து பள்ளிவாசலில் முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கறுப்பு பட்டியணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் – சபை அமர்வை ஆரம்பித்து நியூஸிலாந்து பள்ளிவாசலில் முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து தீர்மானம் ஒன்றை வாசித்தார்.

“முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். முஸ்லிம்கள்  தீவிரவாதிகளில்லை.

இஸ்லாம் – சமதானத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகின்றது. தீவிரவாதத்தை ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை. முஸ்லிம்களை இலக்கு வைத்து பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்டுவரும் இவ்வாறான தாக்குதல்கள் நிறுத்த வேண்டும். காத்தான்குடியிலும் 1990ம் ஆண்டு இரண்டு பள்ளிவாசல்களில் இவ்வாறான படுகொலைச் சம்பவம் நடைபெற்றதையும் இங்கு நினைவு கூறுகின்றேன்.

நியூஸிலாந்து நாட்டு பிரதமர் எடுத்த உடனடியான மனிதாபினமான நடவடிக்கைக்காக, எமது காத்தான்குடி நகர சபை, நியூஸிலாந்து நாட்டு பிரதமரை பாராட்டுவதுடன், இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த படுகொலையில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களுக்காக பிராத்திக்கிறோம்” என்று, நகர சபை தவிசாளர் அஸ்பர் கண்டன தீர்மானித்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ‘அல்லாஹு அக்பர்’ என்று சப்தமிட்டு,கண்டன தீர்மானத்தை அனைவரும் அங்கீகரித்து – நிறைவேற்றினர்.

பிரதி தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம் உட்பட, உறுப்பினர்கள் அனைவரும் சபை அமர்வில் கலந்து கொண்டனர்.

Comments