யாழ் மேயர் மற்றும் மனைவிக்கு கொலை மிரட்டல்

🕔 March 21, 2019
– பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும், அவரின் மனைவிக்கும் கடிதம் மற்றும் வைபர் மூலமாக  கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், அவை குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகல சபை முதல்வர் இ. ஆனொல்ட்டின்  பெயருக்கு கடந்த  15 ஆம் திகதி  அனுப்பப்பட்ட கடிதம் மூலம் கொலை அச்சுறுத்தல் விடப்பட்டதோடு, அக்காலத்தில்  நடைபெற்ற கம்பன் கழக இறுதி நிகழ்விற்குச் செல்லும் சமயம் கொல்லப்படுவாய் எனவும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

மேலும், அதில் ஓர் அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்டு,  அந்த அசியல்வாதி மிகவும் பொல்லாதவர். அவரை  அறியாது மோத வேண்டாம் எனவும் எழுதப்பட்டிருந்தது.

இவ்  அச்சுறுத்தல்  தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதம பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு மாநகர முதல்வர் கொண்டு சென்றதோடு, முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளார். அத்துடன் குறித்த அச்சுறுத்தல்  தொடர்பாக   பொலிஸாரிடம் முறையிடப்பட்டதனைத் தொடர்ந்தும் அச்சுறுத்தல் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு தொடரும் அச்சுறுத்தலின் தொடர்ச்சியாக, முதல்வர் ஆனொல்ட்டின் துணைவியாரான அரச ஊழியரின் தொலைபேசியில் உள்ள வைபர் இலக்கத்துக்கு, ஓர் புதைகுழியின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு, இதற்கு தயார் செய்யவும் என எழுதப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலும்  குறித்த புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்ட இலக்கம் குறித்தும்  பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்