வடக்கில் வீட்டுத் திடங்களை, எமது அமைச்சு மட்டுமே இம்முறை மேள்கொள்ளும்: பிரதியமைச்சர் காதர் மஸ்தான்

🕔 November 9, 2018
ரிமையுடன் கூடிய அபிவிருத்தியை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்  என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான்
தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிர் மற்றும் சொத்துக்களை இழந்த மக்களில், தெரிவுசெய்யப்பட்ட 279 குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஷ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மக்களுக்கு நஷ்டஈட்டு தொகைக்கான  காசோலைகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

“யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புக்கள், சொத்தழிவுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அழிவு என்பவற்றுக்கான நஷ்டஈடுகளை நாம் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்று முல்லைத்தீவில் 279 பேருக்கும் கிளிநொச்சியில் 314பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 155பேருக்கும் மொத்தமாக 748 பேருக்கு 75.95 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்  இந்த நடவடிக்கையை எமது அமைச்சு முன்னெடுதுள்ளது.

என்றாலும் இந்த தொகையானது உங்களின் இழப்புகளுக்கு மாற்றீடாக அல்லது உங்களது இழப்புக்களை சரி செய்துவிடும் ஒன்றாக அமையாது என்பதை நாம் அறிவோம்.

ஆனாலும் குறித்த பணத்தைக்கொண்டு உங்களால் சொந்தமாக ஒரு சுய தொழிலையாவது முன்னெடுக்க வேண்டும் என்றே நாம் ஆசப்படுகின்றோம்.

குறிப்பாக இன்றைய நாளில் 25.2 மில்லியன் ரூபாவினை உங்களுக்கு நாம் நஷ்டஈட்டு தொகையாக வழங்கி வைத்துள்ளோம்.

அத்துடன் எமது அதிகார சபையின் தலைவர் கூறியது போல, மிகவும் குறைந்த வட்டியில் கடன் வசதிகளை பெறும் சந்தரப்பங்களையும் உங்களுக்கு நாம் அறிமுகம் செய்துள்ளோம் அதனூடாக உங்களது இதர தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.

மேலும் எமது நாட்டின் ஜனாதிபதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை அறிந்து பல்வேறான பயன்தரக்கூடிய பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே வருகின்றார்.

எமது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து, வடக்கு மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் மேலும் விரைவாக செயல்படுத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த அடிப்படையிலேதான் யுத்த காலத்தில் மக்களோடு மக்களாக இருந்து அவர்களுடைய இன்பதுன்பங்களை அறிந்த நமது பகுதியை சார்ந்த அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவை புனர்வாழ்வு அமைச்சராக ஜனாதிபதி நியமித்து இருக்கின்றார்.

விடுமுறை நாட்களில் கூட தன்னுடைய நேரத்தை ஒதுக்கி மக்களுக்கு மிக விரைவாக செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் பேசுகிறார்.

அத்துடன் கடந்த காலங்களில் வடக்கில் வீட்டுத் திட்டம் யார் வழங்குகிறார்கள் அல்லது எந்த அமைச்சு செய்கின்றது என்ற கேள்வி ஜனாதிபதிக்கே தெரியாமல் இருந்ததாகவும் கூறி இருந்தார்.

ஆனாலும் இம்முறை வீட்டுத்திட்டம் என்றால் எமது அமைச்சு மாத்திரமே செய்யும் என்பதுடன், இந்த வருட இறுதிக்குள் வடக்கில் 15,000 வீடுகளை அமைக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். மேலும் இந்த மாத இறுதிக்குள் 5000  வீடுகளை அமைக்கவும் முதற்கட்டமாக 05 மாவட்டங்களுக்கும் 1000 வீடுகள் வீதம் வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.

அரசியல் மாற்றம் என்பது அவ்வப்போது ஏற்படும். பல மாதிரியும் பல சூழலிலும் ஏற்ப்படும். ஆனாலும் அரசாங்கம் மாறினாலும் அதன் வேலைத்திட்டங்கள் தொடரும். எனவே இதில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
என்னை பொறுத்த வரையில் நமக்கு இப்பொழுது தேவை உரிமையுடன் கூடிய அபிவிருத்தியே ஆகும்.

அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் வடக்கு மகாணம், அபிவிருத்தி மழையால் நனையும் என்பதுடன், எமது அமைச்சின் எந்த செயற்திட்டமாக இருந்தாலும் அவை வெளிப்படைத்தன்மையும் மக்களுக்கு பயன்தரும் செயற்திட்டமாகவுமே இனியும் காணப்படும்” என்றார்.

குறித்த நிகழ்வில் மீள் குடியேற்ற புனர்வாழ்வு இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டதுடன், அரச உயர் அதிகாரிகள் தினக்களங்களின் தலைவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments