காத்திருக்கும் ஆபத்து; முஸ்லிம்களே கவனம்: வருகிறது மாகாண சபைத் தேர்தல்

🕔 October 31, 2018
– எஸ்.என்.எம். ஸுஹைல் –

லங்கை முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் பெரும் ஆபத்தொன்று காத்திருக்கிறது. ஜனாதிபதி விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக அவரின் வார்த்தைகள் சாட்சியாக அமைந்திருக்கிறது. கடந்த திங்களன்று ஹம்பாந்தோட்டையிலும் செவ்வாயன்று கொழும்பிலும் உடனடியாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதிக்கு புதிய முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே திட்டம். அந்த புதிய தேர்தல் முறை தாமரை மொட்டு மஹிந்த அணிக்கும் சாதகமானதாகும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்கு கூட்டணி, ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கிற்கு வெளியே ஆபத்தானதாகவே அமையும்.

மாகாண சபை தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கைக்கு பாராளுமன்றில் கடும் எதிர்ப்பு வெளியானது. அதனால் மீளாய்வுக்குழு அமைக்கப்பட்டு அப்போதைய பிரதமர் தலைமையில் ஐவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதில் திருத்தம் ஏற்படுத்த அனுப்பப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு சாதகமில்லாத அந்த சட்டத்தை இழுத்தடிக்கவே முயற்சித்தார். எனினும் இன்று மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த சட்ட மூலம் சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் சாதகமாக இருப்பதனால் அதை மீண்டும் பாராளுமன்றுக்கு அனுப்பாது, சட்டம் இயற்ற ஜனாதிபதிக்கு அனுப்ப வாய்ப்பே இருக்கிறது. இது முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் சிறு கட்சிகளுக்கும் பெரும் ஆபத்தானதாக அமையும்.

சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவும், ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தெரிவான மைத்திரிபால சிறிசேன இப்படியொரு துரோகத்தனத்திற்கு திட்டமிட்டுதான் காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறாரா? என்கிற சந்தேகம் எழ ஆரம்பித்திருக்கிறது. மைத்திரி அப்படி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தற்போது அவரின் நடவடிக்கைகள் அப்படித்தான் அமைந்திருக்கின்றன.

எனவே, இவ்விடயம் குறித்து அவசரமாக முஸ்லிம், தமிழ் அரசியல் தலைமைகள், சட்ட வல்லுனர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் விரைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கடந்த காலங்களில் இந்த மாகாண எல்லை நிர்ணய விடயம் மற்றும் தேர்தல் முறை விடயத்தில் பேராசிரியர் ஹஸ்புல்லா தனி மனிதனாக நின்று போராடினார். அவர் இன்று நம் மத்தியில் இல்லை. அவர் விட்டுச் சென்ற பணியை நாம் தொடர முன்வர வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்