அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை

🕔 September 21, 2018

– அஹமட் –

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாஉல்லா மீது அதிருப்தி கொண்டு, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புகளை, முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ள நிலையில், இந்த கசப்புகளுக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து,  உதுமாலெப்பைக்கு நெருக்கமான தரப்பிலிருந்து பேச்சுக்கள் கசிந்து வருகின்றன.

தேசிய காங்கிரசில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையை இதுவரை காலமும் அந்தக் கட்சியின் தலைவர் அதாஉல்லா – தனது அரசியலை வளத்துக் கொள்வதற்கான ஒரு கருவியாகவும், தனக்காகச் செலவு செய்வதற்கான ஒரு இயந்திரம் போலவுமே பயன்படுத்தி வந்ததாக உதுமாலெப்பைக்கு நெருங்கியவர்கள் ‘புதிது’ செய்தித்தளத்திடம் கூறினர்.

மேலும், கிழக்கு மாகாண அமைச்சராக உதுமாலெப்பை பதவி வகித்த போது, அவருக்குக் கிடைத்த நிதிகளில் அதிகமானவற்றை, அக்கரைப்பற்றுக்கே அதாஉல்லா பயன்படுத்தியதாகவும் உதுமாலெப்பையின் விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும், இவ்வாறு பெறப்பட்ட நிதி மூலம் அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு அபிருத்திக்குரிய விளம்பரப் பதாகையிலும் உதுமாலெப்பையின் படங்களோ பெயரே இடம்பெறவில்லை என்றும், அதாஉல்லாவினதும் அவரின் புதல்வர் சகி அகமட்டின் படங்களும் பெயர்களுமே காட்சிப்படுத்தப்பட்டதாகவும் உதுமாலெப்பை தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, உதுமாலெப்பையின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் சில குறிப்பிட்ட அபிவிருத்திகளை தேசிய காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை என்று, எதிர் தரப்பு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக வலைத் தளங்களில் எழுதிய போது, அதற்கு காரணம் உதுமாலெப்பைதான் என்றும், அவர் நினைத்திருந்தால் அந்த அபிவிருத்திகளை செய்திருக்கலாம் எனவும் அதாஉல்லாவுக்கு மிக நெருக்கமானவர்கள் சமூக வலைத்தளங்களில் பதில் எழுதியமை, உதுமாலெப்பையை மிகவும் கடுமையாகப் பாதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

“சாதாரணமான உன்னை நான்தான் மாகாண அமைச்சர் ஆக்கினேன். எனவே, எனக்கு அரசியல் பணி செய்வதும், எனது அரசியலுக்காக பணம் செலவிடுவதும் உன்மீது விதிக்கப்பட்ட கடமையாகும்” என்கிற மனநிலையுடன்தான், உதுமாலெப்பையை அதாஉல்லா – ஒரு சூழ்நிலைக் கைதிபோல் பயன்படுத்தி வந்ததாகவும், உதுமாலெப்பையின் நெருக்கத்துக்குரியவர்கள் விசனத்துடன் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அதாஉல்லாவுடன் இணைந்து மீளவும் உதுமாலெப்பை அரசியல் செய்வாரா என்று, உதுமாலெப்பைக்கு நெருக்கமானவரும், தேசிய காங்கிரசின் உயர்பீடத்தைச் சேர்ந்தவருமான ஒருவரிடம் ‘புதிது’ செய்தித்தளம் வினவியபோது; ‘தான் எடுத்த வாந்தியை மீளவும் உண்ணும் ஆள் – உதுமாலெப்பை இல்லை’ என்று, அவர் அழுத்தமாகக் கூறினார்.

Comments