வளத்தாப்பிட்டி தீ வைப்பு சம்பவம்: மத மாறச் செய்வதற்கான நடவடிக்கை அல்ல: உப தவிசாளர் ஜெயசந்திரன் தெரிவிப்பு

🕔 September 12, 2018

– யூ.எல்.எம். றியாஸ் –

ம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது

இந்த நிலையில், இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மாறுமாறு வலியுறுத்தியே, தனது வீட்டை முஸ்லிம்கள் எரித்ததாக, பாதிக்கப்பட்ட வீட்டில் வசித்தவர் கூறியதாகத் தெரிவித்து, சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டிருந்தன.

மேற்படி செய்திகளைக் கண்டித்தும், நடந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை என்ன என்பதை விளக்கும் வகையிலம் நேற்று செவ்வாய்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

சபையின் உப தவிசாளர் வி. ஜயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில், சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர்களும் பிரசன்னமாயிருந்தனர்.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வி. ஜயசந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்;

“அண்மையில் வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புறத்தில் இடம்பெற்ற தீ வைப்பினால் ஒரு வீடும், ஒரு முச்சக்கர வண்டியும் முற்றாக எரிந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர், தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொன்னதாகவும் தான் அதற்கு மறுத்தமையினால்தான் தனது உடமைகளுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

குறித்த சம்பவம் தொடர்பாக உரிய பிரதேசத்திற்கு நேரில் சென்று விசாரித்தபோது இது முற்றிலும் உண்மைக்குப்புறம்பான செய்தி என்பதைஅறியமுடிந்தது

அந்த சம்பவமானது இரு நபர்களுக்கு இடையே இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சினையின் விளைவாக நடந்துள்ளது. இதன் பின்னணியை அறியாமல் பொறுப்புவாய்ந்த சில ஊடகங்கள், தவறான செய்தியை வெளியிட்டமை கண்டிக்கத்தக்கது. ஒற்றுமையாக வாழும் சமூகங்களை பிரிக்கின்ற ஒரு செயற்பாடாகவும் இதனைநாம் பார்க்கமுடிகின்றது

ஒரு சமூகத்தை நல் வெளிப்படுத்துகின்ற ஊடகங்கள் சம்பவத்தின் உண்மைத்தன்மையையை அறியாமல் செய்தி வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இக் கிராமத்தில் இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மாற்றும் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்பதனை நான் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிப்பட்ட நபர்களுக்கு இடையே இடம்பெறும் பிணக்குகளை வைத்து, யாரவது லாபமடைய நினைப்பார்களேயானால் அதை நான்கண்டிக்கின்றேன்.

பாதிக்கபட்ட நபரிடம், உன்னை யார் மதம் மாற கட்டாயப்படுத்தினார்கள் என்று கேட்டபொழுது, எரிந்த தனது முச்சக்கர வண்டிக்குப் பதிலாக, ஒரு வண்டியை யாராவது பெற்றுத் தந்தால், தான் கூறிய விடயத்துக்கு மறுப்புத் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

ஆகவே, குறித்த தீ வைப்பு சம்பவம் கட்டாய மத மாற்றத்தை வலியுறுத்தி நடைபெறவில்லை என்பதனை மிகவும் ஆணித்தரமாக  தெரிவிக்கின்றேன்” என்றார்.

Comments