வவுனியா பம்பைமடு குப்பை மேட்டினால், மக்கள் பாதிப்பு; தீர்வு பெற்றுத் தருமாறு கோரிக்கை

🕔 September 12, 2018

– அஹமட் –

வுனியா மாவட்டத்திலுள்ள பம்பைமடு எனும் இடத்தில், வவுனியா நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ச்சியாகக் கொட்டப்படுகின்றமையினால், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் மிகக் கடுமையான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, குறித்த குப்பை மேட்டை அங்கிருந்து அகற்றி, பொருத்தமான இடமொன்றில் குப்பைகளைக் கொட்டுமாறு, வவுனியா பிரதேச சபையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வவுனியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பிரதேச சபையினர் சேகரிக்கும் குப்பைகளை பம்மைமடு பகுதியில் கொட்டி வருகின்றனர்.

இதனால், குறித்த பகுதியானது, பாரிய குப்பை மேடாக மாறியுள்ளதோடு, அங்கிருந்து உருவாகும் துர்நாற்றம் மற்றும் சுகாதாரப் பாதிப்புகளினால், அந்தக் குப்பை மேட்டினை சுற்றியுள்ள கிராம மக்கள் பாரிய அசௌகரியங்களையும், சுகாதார அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தக் குப்பை மேட்டுக்கு அருகிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுமக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்தக் குப்பை மேட்டினை, அகற்றுமாறு உரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், அது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாது, குறித்த குப்பை மேட்டினை உடனடியாக அகற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments