புத்தளத்தில் அமைச்சர் றிசாட் வாழ்வாதார உதவி; 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்
🕔 September 12, 2018
மக்களின் வாழ்க்கை தரத்தையும் வருமானத்தையும் அதிகரித்து, அவர்களின் வாழ்விலே மலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே சுயதொழில் வாய்ப்புக்கான ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் பிரதேச செயலகத்தில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன் வழங்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார்.
புத்தளம் பிரதேச செயலாளர் சஞ்சீவனி ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம், புத்தளம் நகரசபை உறுப்பினர்களான டில்ஷான், அனுலா குமாரி, ஜமீனா இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ரிபாஸ், ரிஜாஜ் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர்;
“வாழ்வாதாரம் வழங்குவது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, அவர்களுக்கு நிம்மதியையும், சந்தோசத்தையும் பெற்றுக்கொடுப்பதற்காகவே ஆகும். இந்த நல்லெண்ணத்தில்தான் இவ்வாறன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
கடந்த காலங்களிலும் இந்த பிரதேசங்களில் நாம் பல்வேறு உதவிகளை வழங்கியிருக்கின்றோம். எனது அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன் இந்தப் புதிய திட்டத்தை வகுத்து, நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
பிரதேச வளங்களைப் பயன்படுத்தி சுயமாகத் தொழில் செய்து, நீங்கள் வருமானத்தை ஈட்டுவதற்கு இவ்வாறான திட்டங்கள் பெரிதும் உதவும் என நம்புகின்றேன்” என்றார்.
இந்நிகழ்வில், புத்தளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 411 பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அமைச்சரின் ஊடகப் பிரிவு)