இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை

🕔 September 7, 2015

Hakeem - 096
– ஜம்சாத் இக்பால் –

நாட்டுக்கு தேவையானது ஸ்திரமான அரசாங்கமாகும். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்திரமான அரசாங்கத்தை – இணக்க அரசியலினூடாகக் கொண்டு செல்ல முடியுமென்பது, எமது திடமான நம்பிக்கையாகும் என்று மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டமையானது, இன நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளது எனவும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – பத்தரமுல்ல, பெலவத்தையில் அமைந்துள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில், இன்று திங்கட்கிழமை காலை, கடமைகளை பொறுப்பேற்க வருகை தந்தார். இதன்போது, வழங்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“நடந்து முடிந்த எட்டாவது நாடாளுமன்றத் தேர்தலில், எங்களுக்கு மக்கள் ஆணை கிடைத்தது. ஆயினும், நாடாளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக் கொள்வதில் குறைபாடு காணப்பட்டது. அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து – இல்லாமல் செய்து, தேசிய அரசாங்கத்தை நிறுவியதன் மூலம், இந்த நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததொரு சாதனையினை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றார்கள்.

யுத்தத்துக்குப் பிறகு, முழு சர்வதேசமும் எதிர்பார்த்த விதத்தில், இணக்க அரசியலொன்றை முன்கொண்டு செல்வதற்கு – சாத்தியமான தீர்மானம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 08ஆம் திகதி பெற்றுக் கொண்ட ஆரம்ப வெற்றியின் பயனாக, பல பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கடமை – எங்களைப் போன்ற அமைச்சர்களுக்கு உள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணின் சின்னத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட எமது வேட்பாளரின் வெற்றிக்கு ஒத்துழைத்தவர்களுக்கு, நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இந்த நாடாளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான 07 உறுப்பினர்கள் உள்ளோம். எங்கள் மீது ஜனாதிபதியும், பிரதமரும் வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் பேணிப் பாதுகாப்போம்.

ஜனவரி 08ஆம் திகதிய வெற்றிக்கு, மாதுலுவாவே சோபித்த தேரரின் அமைப்பு உள்ளிட்ட ஏனைய சிவில் அமைப்புகள் கூடுதலான பங்களிப்பை செய்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது மாநாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உணர்வு பூர்வமான, கருத்தாழமிக்க உரைகளை நிகழ்த்தினர். அதன் பின்னர், ஜனாதிபதியிடம் நான் சென்று, ‘நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரின் உள்ளங்களோடும், உணர்வுகளோடும் உரையாடினீர்கள்’ என கூறினேன்.

உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினரின் கண்களில் கண்ணீர் மல்குமளவிற்கு ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது.

இந்தப் பயணம் தொடருமா, நாங்கள் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி நாட்டை கொண்டு செல்வதற்கு – சுயநலவாத அரசியலில் ஈடுபடும் கும்பல்கள் இடமளிக்குமா என்ற சந்தேகம் எங்களுக்குள்ளும், நாட்டு மக்கள் மத்தியிலும் இருந்தன. அந்தச் சந்தேகங்களுக்கெல்லாம் ஆப்பு வைத்தால் போலவும், ஆணி அறைந்தால் போலவும் – ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உரைகள் அமைந்திருந்தன. மக்களின் சந்தேகங்களுக்கு அவர்களின் உரைகளில் தெளிவான பதில்கள் கிடைத்தன. அதேபோன்றுதான், வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்த நிகழ்விலும் ஜனாதிபதி ஆற்றிய உரை அமைந்திருந்தது.

நாட்டுக்கு தேவையானது ஸ்திரமான அரசாங்கமாகும். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்திரமான அரசாங்கத்தை – இஇணக்க அரசியலினூடாகக் கொண்டு செல்ல முடியுமென்பது, எமது திடமான நம்பிக்கையாகும்.

கடந்த ஆட்சிக்காலத்தில், மேற்கு நாடுகளை நாங்கள் தேவையில்லாமல் பகைத்துக் கொண்டோம். ஆனால், இப்பொழுது எங்களது உள்ளக முரண்பாடுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காண்பதில், அந்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இது ஒரு திருப்பு முனையாகும்.

நாங்கள் எதிர்பாராத விதத்தில் எங்களுக்கு உதவுவதற்கு, மேற்கு நாடுகள் முன்வந்திருப்பதை, இந்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை மாநாட்டின் செயலமர்வின் போது தெரிந்து கொள்ளலாம். கடந்த ஐந்து மாதங்களாக, இந்த விவகாரம் சூடுபிடித்திருந்தது. 2012ஆம் ஆண்டு, நீதியமைச்சர் எனும் வகையில், ஜெனீவாவில் விவகாரத்தின் நிமித்தம் ஒரு மாதகாலம் தங்கியிருந்து செயலாற்றினேன். அப்பொழுது எவ்வாறான திசையில், இலங்கை விவகாரத்தை சர்வதேச சமூகம் அணுகியதென்று எனக்கு நன்றாகத் தெரிந்தது.

அவ்வாறான நிலைமையை மாற்றி, இந்நாட்டு அரசாங்கத்தின் இருப்பை தக்கவைப்பதற்காக, இப்பொழுது – இலங்கை அரசாங்கத்தின் மீது, சர்வதேசம் ஒருவிதமான நெகிழ்வுத் தன்மையை கடைப்பிடிக்க முன்வந்திருப்பது, முன்னேற்றகரமானதொரு நிலைப்பாடாகும். இவ்வாறான நிலை முன்னர் இருந்ததில்லை.

இன்னொரு முக்கியமான விடயமும் உள்ளது. வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற நடைமுறைக்கு அமைவாக, எதிர்கட்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மற்றும் சபாநாயகர் நடந்து கொண்டனர். அதாவது, எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை நியமித்தமை, இன நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளது. அதையும் குழப்புவதெற்கென்று ஒரு கும்பல் இருந்தது. ஆனால் அந்தச் சிறிய கும்பல் தோற்றுவிட்டது.

எங்களது பயணம் நீண்டது. அது – நாட்டை நிச்சயமாக முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

நாட்டின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நகர நிர்மாணங்களை முன்னெடுப்பதற்குமான அமைச்சுப் பொறுப்பு, மீண்டும் எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், அடுத்த கோடைகாலத்திற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது பற்றியும், நாம் நன்கு திட்டமிட்டு செயலாற்ற வேண்டியுள்ளது.

நெல் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதில், எனது கட்சி பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண மக்கள், குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்கள் மிகவும் பிரச்சினைக்குள்ளாகியிருக்கின்றார்கள். அவ்விவகாரம் தொடர்பிலும், நாம் உரிய கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றோம்” என்றார்.

இந்நிகழ்வில் – கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸனலி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர், பொறியலாளர், அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் நாடெங்கிழுமிருந்து வந்திருந்த கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.Hakeem - 098Hakeem - 095

Comments

புதிது பேஸ்புக் பக்கம்