அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல்

🕔 July 10, 2018

– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயம் ஒன்றினைப்போல் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஒரு பிராந்தியக் காரியாலயம் அமைக்கப்படவுள்ளது என்று, கிழக்கு மாகாண முன்னாள்  உறுப்பினரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் கீழுள்ள நீரிணைப்புக்களில் 40 ஆயிரம் இணைப்புக்களைப் பிரித்தெடுத்தே, புதிய காரியாலயம் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம், அவரின் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாகத் தோன்றி, கேள்வி – பதில் நிகழ்வொன்றில் இன்று செவ்வாய்கிழமை இரவு கலந்து கொண்டார். இதன்போது முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்றிலுள்ள மேற்படி பிராந்தியக் காரியாலயத்தினை, வேறு பிரதேசத்துக்கு கொண்டு செல்லவுள்ளமை குறித்து, இன்று நடைபெற்ற அக்கரைப்பற்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு, அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் சமர்ப்பித்த பிரேரணையொன்று தொடர்பாக, தவத்திடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் வழங்கிய பதிலில் மேலும் தெரிவிக்கையில்;

அக்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் பிராந்தியக் காரியாலயத்தின் கீழ் சுமார் 80 ஆயிரம் நீர் இணைப்புக்கள் உள்ளன என்றும், அவற்றில் 40 ஆயிரம் இணைப்புக்களைப் பிரித்தெடுத்து, அந்த இணைப்புக்களை நிர்வகிப்பதற்காக இன்னுமொரு பிராந்திய காரியாலயத்தை உருவாக்கவுள்ளதாகவும் தவம் விபரித்தார்.

அக்கரைப்பற்றினைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு, கல்முனை மற்றும் சாய்ந்தமருது மக்களின் வாக்குகள் தேவைப்பட்ட போதும், அந்தப் பிரதேச மக்களுக்கு நன்மைகள் எவையும் கிடைத்து விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார் என்றும் தவம் குற்றம் சாட்டினார். அதாஉல்லாவின் அந்த மனநிலையைத்தான் அவருடைய கட்சியைச் சேர்ந்த சபீஸ், இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தியதாகவும் தவம் மேலும் கூறினார்.

“அக்கரைப்பற்றில் தற்போதுள்ள நீர் வழங்கல் பிராந்தியக் காரியாலயத்தைக் கொண்டு வந்தபோது, அக்கரைப்பற்று பிரதேசத்தில் எந்தவொரு நீரிணைப்புக்களும் இருக்கவில்லை. கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களிலிருந்த 15 ஆயிரம் நீரிணைப்புக்களைக் காட்டியே, அக்கரைப்பற்றில் பிராந்தியக் காரியாலயமொன்றினை உருவாக்கினோம்” என்றும் தவம் இதன்போது விபரித்தார்.

குரல் பதிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்