தெ.கி. பல்கலைக்கழகத்தின் இழுத்தடிப்பிடினால், வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் பாதிப்பு

🕔 July 4, 2018

– அஹமட் –

லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பினை தொடரும் மாணவர்கள் பல்வேறு வழிகளிலும் இழுத்தடிப்புச்செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

மேற்படி மாணவர்களுக்குரிய பரீட்சை மற்றும்  பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் இழுத்தடிப்புச் செய்து வருவதாக மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் 2014/2015 மற்றும் 2015 /2016 கல்வியாண்டுக்கான மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் வெளிவாரி பட்டப்படிப்புக்காக 2015 ஒக்டோபர்13 மற்றும் 14ஆம் திகதிகளில் பதிவு செய்யப்பட்டனர். அதிலிருந்து பல்கலைக்கழக மாணவர்களாக இவர்கள் உள்ளீர்க்கப்பட்டனர். இம்மாணவர்களுக்கு முதலாம் வருடத்துக்கான முதலாம் பருவகால கருத்தரங்கு மற்றும் பரீட்சை என்பன 2016 ஜூலை மாதமளவில் இடம்பெற்றன. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நேரசூசியின்அடிப்படையில் இந்தப்  பரீட்சைகள் நடைபெற்றிருந்தன.

இதன் பின்னர் முதலாம் வருடத்துக்கான இரண்டாம் பருவத்துக்குரிய கருத்தரங்கு 2017 ஜூலை மாதம் இடம்பெற்றது. அதனோடு இணைந்ததாக நடத்தப்படும் 30 புள்ளிகளுக்கான பரீட்சைகளும் இடம்பெற்றன.

ஆனால் கருத்தரங்கினை தொடர்ந்து இடம்பெறுகின்ற 70 புள்ளிகளுக்கான பரீட்சை ஒரு வருடகாலமாகியும் இடம்பெறவில்லை. இதனால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை கேள்விக்குறியாகியுள்ளது. கருத்தரங்கு நிறைவுபெற்று ஓரிரு வாரங்களுக்குள் இடம்பெறும் பரீட்சை, இதுவரை இடம்பெறாமலிருப்பதன் மர்மம் புரியாமலுள்ளதாக வெளிவாரி கற்கை மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்இ முதலாம் வருடத்துக்கான முதலாம் பருவத்துக்குரிய பரீட்சைகள் நிறைவுபெற்று இரண்டு (02) வருடங்களாகியும் இதுவரை அப்பரீட்சைகளின் பெறுபேறு வெளியிடப்படவில்லை. இருந்தபோதும் மாணவர்கள் இரண்டாம் பருவத்துக்கான பரீட்சைக்கு தயார் படுத்தப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்களுள் முதலாம் வருடத்துக்கான முதலாம் பருவ பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் விபரம் வெளியிடப்படவில்லை என்பது வேடிக்கையானதாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கைகள் நிலையத்தின் நிருவாகப் போக்கிலுள்ள சீரின்மை இதனூடாக வெளிப்படுத்தப்படுகின்றது. இதற்கான முழுப் பொறுப்பினையும் கடந்த காலத்தில் இப் பல்கலைக்கழகத்தில் உவேந்தராக பதவியாற்றிய போராசிரியர் எம்.எம்.எம். நாஜிமே பொறுப்பேற்றுக் கொள்தல் வேண்டும்.

பரீட்சை இடம்பெற்று இரண்டுவருடங்களாகியும் பெறுபேற்றை வெளியிட முடியாதளவுக்கான ஆளணியினையா தென்கிழக்கு பல்கலைக்கழகம் கொண்டுள்ளது?

அத்துடன் கருத்தரங்கு நடத்திய கையோடு பரீட்சை நடத்த வேண்டியவர்கள், ஒரு வருடத்தின் பிற்பாடு பரீட்சை நடத்தவுள்ளனர். இதனால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பது பற்றியும் தெளிவுபடுத்துதல் அவசியமாகும். அல்லது பரீட்சைக்கு ஒரு வார காலத்துக்கு முன்னர் மீளவும் கருத்தரங்கினை நடத்துவது பற்றி ஆராய வேண்டும்.

முதலாம் வருடத்தின் முதலாம் பருவ காலத்தில் நடப்பட்ட உடனடிப் பரீட்சைக்கான (On time Exam) புள்ளி 20 என்றும், ஒப்படை செயற்பாட்டுக்கு 10 புள்ளிகள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முதலாம் வருடத்தின் இரண்டாம் பருவ காலத்தில் ஒப்படை முறைமை இல்லாமல் ஆக்கப்பட்டு,  அதற்கு பதிலாக பரீட்சைகள் நடத்தப்பட்டன. அந்தப் பரீீட்சை ஒவ்வொன்றுக்குமான மொத்தப் புள்ளி 10 ஆகும். பின்னர் ஒவ்வொரு பாடத்துக்கும் உடனடிப் பரீட்சைகளும் (On time Exam) நடத்தப்பட்டன. அந்தப் பரீட்சைக்கான மொத்தப் புள்ளி 20 ஆகும்.

இந்த நிலையில், ஒப்படைக்காக நடத்தப்பட்ட பரீட்சை மற்றும் உடனடிப் பரீட்சைகளும் (On time Exam) ஆகியவற்றுக்கான 30 புள்ளிகளில் 12 புள்ளிக்கு குறைந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் 70 புள்ளிகளுக்குரிய பரீட்சைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்கிற செய்தியொன்றும் மாணவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறான நிபந்தனை எதுவும் மாணவர்கள் கையேட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிவாரிக் கற்கைகள் நிலையம் – தான் நினைத்த மாத்திரத்தில் புள்ளிவழங்கும் முறைமையை தீர்மானிப்பது எந்தவகையில் நியாயம்?

மேலும், முதலாம் வருடத்துக்குரிய இரண்டாம் பருவ பரீட்சை இம்மாதம் 21ஆம் திகதி நடாத்துவதுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகஅறியமுடிகின்றது. ஆனால் இதுவரை மாணவர்களுக்கு இது குறித்த எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. கடைசி நேரத்தில் தகவலை வழங்கிவிட்டு, மாணவர்கள் சித்திபெறும் வீதத்தை குறைக்கும் ஏற்பாடு போலவே இது உள்ளது.

வெளிவாரிக் கற்கைகளை தொடரும் மாணவர்களின் கல்விச்செயற்பாட்டில் இவ்வாறு இழுத்தடிப்புச் செய்வதானது இப்பிராந்தியத்தில் உருவாக்கப்படும் கல்விச்சமூகத்தின் வாசலை மூடும் செயலாகவே பார்க்கப்படுகின்றது.

இந்த செயற்பாடுகளையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, தென்கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் வெளிவாரியாக பட்டப்படிப்பினை தொடரும் மாணவர்களின் கனவுகளில் மண்ணை அள்ளிவீசுகின்ற செயற்பாடாகாவே இதனை நோக்கவேண்டியுள்ளது.

அத்துடன் இவ்வாறான இழுத்தடிப்புகள் –  தமது பிந்திய வயதொன்றில் பட்டமொன்றினை பெற்று அரச தொழிலொன்றுக்குள் நுழையும் எண்ணத்துடன் இருக்கும் மாணவர்களின் எண்ணத்தினையும் சுக்குநூறாக்கி விடும் என்பதும் கவலைக்குரியதாகும்.

இப்போதுள்ள சூழலில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள பேராசிரியர் உமா குமாரசுவாமி இதுவிடயத்தில் விரைந்து செயற்பட்டு மாணவர்களின் பெறுபேற்றை வெளியிட உத்தரவிடுவதுடன், கருத்தரங்குகள்மற்றும் பரீட்சைகளை உரிய காலத்தில் நடத்துவதுக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்